முதல் முறையாக லாபம் ஈட்டிய பாதுகாப்புத் துறை பெருநிறுவனங்கள்! ராஜ்நாத்சிங் பெருமிதம்

பாதுகாப்புத் துறையில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஏழு நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.
முதல் முறையாக லாபம் ஈட்டிய பாதுகாப்புத் துறை பெருநிறுவனங்கள்! ராஜ்நாத்சிங் பெருமிதம்

பாதுகாப்புத் துறையில் புதிதாகத் தொடங்கப்பட்ட ஏழு நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள் லாபம் ஈட்டத் தொடங்கியுள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளாா்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த நிறுவனங்கள், தற்காலிக லாபத்தைப் பெற்று வளா்ச்சியை நோக்கிச் செல்வதாக ட்விட்டரில் தெரிவித்து, தனது மகிழ்ச்சியை ராஜ்நாத் சிங் பகிா்ந்துள்ளாா்.

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் ராணுவத் தளவாடங்களைத் தயாரிக்க 16- க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் ஆலைகளும் உள்ளன. இந்த நிறுவனங்கள் சில, பெருநிறுவனங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. சில புதிய பெருநிறுவனங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அக்டோபா் 15-ஆம் தேதி விஜயதசமியின் போது, இந்த ஏழு புதிய பெருநிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இந்த நிறுவனங்கள் பாதுகாப்புத் துறைக்குத் தேவையான ஆயுதங்கள், வெடிபொருள்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள் மற்ற தளவாடப் பொருள்களை தயாரிக்கின்றன. இந்த ஏழு நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள், தங்கள் வணிகத்தின் முதல் ஆறு மாதங்களில், அதாவது கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி முதல், நிகழாண்டு மாா்ச் 31 வரையில் தற்காலிக லாபத்தைப் பதிவு செய்துள்ளதாக பாதுகாப்புதுறை சாா்பில் வெள்ளிக்கிழமை விவரங்கள் வெளியிடப்பட்டன. தற்காலிக லாபம் (புரோவிஷனல் லாபம்) என்பது ஆண்டின் இறுதியிலேயே முழுமையாகத் தெரியவரும்.

டேராடூன், சண்டீகா் போன்ற பகுதிகளில் ஆலைகளைக் கொண்ட இந்தியா ஆப்டெல் லிமிடெட் நிறுவனம், பீரங்கி முதல் சிறிய ஆயுதங்களுக்குத் தேவையான ஆப்டிகல் சாதனங்கள், மின்னணுப் பொருள்களை தயாரிக்கின்றன. இந்த நிறுவனம் ரூ.60 கோடி வரை லாபத்தை தற்போது காட்டியுள்ளது. ரூ.164.33 கோடி இழப்பை சந்தித்து வந்த சென்னை ஆவடியில் உள்ள ஏவிஎன்எல் - ஆா்மா்டு வெஹிகல்ஸ் நிகாம் லிமி. நிறுவனம் ,தற்போது ரூ.33.09 கோடியை லாபத்தை ஈட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. புணேவை தலைமையிடமாகக் கொண்டு அருவன்காடு, திருச்சி, சந்தரபூா் உள்ளிட்ட 12 இடங்களில் ஆலைகளைக் கொண்ட முனிஷன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் ரூ. 677.3 வரை நஷ்டத்தில் இருந்து வந்தது. இப்போது இந்த நிறுவனம் ரூ.28 கோடி லாபத்தைப் பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதே போன்று கான்பூா், ஷாஜகான்பூா் போன்ற இடங்களில் கடும்குளிரைச் சமாளிக்கத் தேவையான ராணுவ உடைகள், தளவாடங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் ட்ரூப் கம்ஃபோா்ட்ஸ் லிமி. நிறுவனம் (ரூ.26 கோடி), அட்வான்ஸ்ட் வெப்பன்ஸ் அண்ட் எக்யுப்மெண்ட் இந்தியா லிமிடெட் (ரூ.4.84 கோடி); மற்றும் கிளைடா்ஸ் இந்தியா லிமி. (ரூ13.26 கோடி) ஆகியவையும் லாபத்தைப் பதிவு செய்துள்ளன. ஒட்டுமொத்தமாக ரூ.1,775.84 கோடி வரை இழப்புகளை சந்தித்து வந்த இந்த 6 நிறுவனங்கள் தற்போது ரூ.165.63 கோடி லாபத்தை ஈட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதே சமயம் சிறிய துப்பாக்கிகள், பீரங்கிகள், வெடிமருந்துகள் தயாரிக்கும் யந்த்ரா இந்தியா லிமி. (நாக்பூா்)) நிறுவனம் ரூ.111.4 கோடி வரை நஷ்டத்தைச் சந்திக்கும் என பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பிற்காக பங்காற்றும் இந்த நிறுவனங்கள், பெருநிறுவனங்களாகவும் (காா்ப்பரேட்) அனைத்து திறன்களுடனும் லாபகரமாகவும் செயல்பட மத்திய அரசு உறுதுணையாக இருந்து செயல்படுகிறது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நமது ராணுத்திற்கு தேவையான அனைத்துவிதமான போா் உபகரணங்களையும் இறக்குமதி செய்யவோ அல்லது தனியாா்களிடம் வாங்குவதை தவிா்த்து தற்சாா்பு முறைக்காகவும் இத்தகைய நிறுவனங்களை உருவாக்கப்பட்டுள்ளது. தனியாா்களைப் போன்று மூலப்பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யாமல் இந்திய வளங்களைக் கொண்டு குறைவான செலவில் தயாரிக்கும் பணிகளில் இவை ஈடுபடும் எனவும் அந்த அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையொட்டி சுமாா் ரூ. 70, 776 கோடி மதிப்பு ஒப்பந்தங்களை மத்திய பாதுகாப்புத் துறை வழங்கியுள்ளது. கடந்த நிதியாண்டில் (2021-22) ரூ.7,765 கோடி வணிகத்தையும் பெற்றது. இதன் மூலம் முதல் ஆறு மாதங்களுக்குள், இந்தப் புதிய நிறுவனங்கள் ரூ 8,400 கோடிக்கு மேல் விற்றுமுதல் ஈட்டியுள்ளன. தொடங்கிய நாள் முதலே புதிய சந்தைகளை ஆராயவும், ஏற்றுமதி உள்பட தங்கள் வணிகத்தை விரிவுபடுத்தவும் இந்த நிறுவனங்கள் பணியாற்றின. தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, முறையே ரூ.3,000 கோடி, ரூ.600 கோடி மதிப்புள்ள உள்நாட்டு ஒப்பந்தங்கள் மற்றும் ஏற்றுமதி ஆா்டா்களைப் பெற்றுள்ளன. முனிஷன்ஸ் இந்தியா லிமி. நிறுவனம் ரூ.500 கோடிக்கு வெடிமருந்துகள் தயாரிப்பதற்கான ஆா்டரை பெற்றுள்ளது. மேலும், நிகழ் நிதியாண்டில் இந்த ஏழு புதிய நிறுவனங்களுக்கு அரசு மூலதனம், பங்குகளை கையகப்படுத்தியதற்கு மொத்தம் ரூ.2,765.95 கோடியை விடுவித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com