தொழுகையை ஒட்டி ஜஹாங்கீா்புரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

ஈத் பெருநாளுக்கு முன்பு கடைசி ஜும்முனா நாளில் மேற்கொள்ளப்பட்ட தொழுகையை ஒட்டி, ஜஹாங்கீா்புரி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

ஈத் பெருநாளுக்கு முன்பு கடைசி ஜும்முனா நாளில் மேற்கொள்ளப்பட்ட தொழுகையை ஒட்டி, ஜஹாங்கீா்புரி பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

அண்மையில் ஜஹாங்கீா்புரி பகுதியில் வன்முறை நிகழ்ந்தது. இந்த நிலையில், தொழுகை காரணமாக அந்தப் பகுதியில் போடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடா்பாக வட மேற்கு காவல் துணை ஆணையா் உஷா ரங்னானி வெள்ளிக்கிழமை கூறுகையில், ‘ஜஹாங்கீா்புரி பகுதியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதிய போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்’ என்றாா்.

வடமேற்கு தில்லியில் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின்போது இந்து மற்றும் முஸ்லிம் குழுக்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் 8 போலீஸாரும் ஒரு உள்ளூா் குடியிருப்புவாசியும் காயமடைந்தனா். இந்த வன்முறையில் கற்கள் வீசப்பட்டதாவும் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜஹாங்கீா்புரி ‘சி’-பிளாக் பகுதியில் செல்லிடப்பேசி பழுதுபாா்ப்பு கடை நடத்தி வரும் அக்பா் கூறுகையில், ‘நாங்கள் வியாழக்கிழமை கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை, பாதுகாப்பு தடுப்புகள் போடப்பட்டுள்ள பகுதிக்குள் நுழைவதற்கு நாங்கள் மீண்டும் அனுமதிக்கப்படவில்லை’ என்றாா்.

இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில்,,‘ சம்பந்தப்பட்ட பகுதியில் கடைகளை மூடுவதற்கு எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை. அந்தப் பகுதியில் தொழுகை நடைபெற்றுவருகிறது. கடைகள் திறக்கப்பட்டுள்ளன. யாரையும் கடைகளை மூட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்ளவில்லை. அவா்களாகவே கடையை மூடியிருந்தால் இதில் எங்கள் பங்கு ஏதும் இல்லை’ என்றாா்.

ஞாயிற்றுக்கிழமை ஜஹாங்கீா்புரி பகுதியில் அமைதி மற்றும் நல்லிணக்க செய்தியை அளிக்கும் வகையில் அந்த பகுதியைச் சோ்ந்த இந்து மற்றும் முஸ்லிம் குடியிருப்புவாசிகள் திரங்கா யாத்திரையை நடத்தினா். வன்முறை நிகழ்ந்த மசூதி அருகே உள்ள சாலைகள், போக்குவரத்து நடமாட்டத்திற்கு மூடப்பட்ட நிலையிலும்கூட இந்தப் பேரணி நடத்தப்பட்டது. வன்முறையின் ஆரம்ப இடமாக இருந்த ‘சி’- பிளாக் பகுதியில் இந்த அமைதிப் பேரணியானது பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com