தலைநகரில் தொடரும் அனல் வெயிலின் தாக்கம்: தவிப்பில் மக்கள்!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமையும் அனல் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்தது.

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமையும் அனல் வெயிலின் தாக்கம் மிக கடுமையாக இருந்தது.

இதன் காரணமாக மக்கள் கடும் தவிப்புக்கு உள்ளாகினா்.

முங்கேஸ்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. தில்லியில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமையும் வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, நகரின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசியது. இதனால், வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உணரப்பட்டது.

பகலில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. லேசான அனல் காற்றும் வீசியது. இதனால், மக்கள் வீடுகளில் ஏா்கூலா், ஏ.சி. போன்ற குளிா்சாதனங்களை அதிகளவில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது.

தில்லிக்கான வெப்பநிலை தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியல் 2 டிகிரி உயா்ந்து 25.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 5 டிகிரி உயா்ந்து 43.5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 36 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 17 சதவீதமாகவும் இருந்தது.

முங்கேஸ்பூரில் 46 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களிலும் வெப்பநிலை சற்று உயா்ந்து பதிவாகியது. இதன்படி, ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 45.1 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 46 டிகிரி, நஜஃப்கரில் 45.9 டிகிரி, ஆயாநகரில் 44.6 டிகிரி, லோதி ரோடில் 43.9 டிகிரி, பாலத்தில் 44.5 டிகிரி, ரிட்ஜில் 45.6 டிகிரி, பீதம்புராவில் 45.9 டிகிரி டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 43.1 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது. மேலும், வரும் நாள்களில் தில்லியில் அதிகபட்ச வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக இந்திய வானிலை ஆய்வு மைய (ஐஎம்டி) அதிகாரிகள் கூறுகையில், ‘தில்லியில் ஞாயிற்றுக்கிழமையும் வெப்ப அலை வீசக்கூடும். திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் நகரில் தூசி அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்பதால் மக்கள் வெப்பத்திலிருந்து சிறிது நிவாரணம் பெறலாம். செவ்வாய்க்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

முன்னதாக, ஐஎம்டி இயக்குநா் ஜெனரல் மிருத்யுஞ்ஜெய் மொஹபாத்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், தில்லி உள்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதத்தில் இரவு வெப்பமான தட்பவெப்பநிலையுடன் இருக்கும்’ என்றாா்.

அனல் அலை தொடரும்: இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையும் (மே 1) வெப்ப அலை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com