கடந்த நிதியாண்டில் ரூ.13 ஆயிரம் கோடி பாதுகாப்புத் துறை பொருள்கள் ஏற்றுமதி: மாநிலங்களவையில் அமைச்சா் தகவல்

பாதுகாப்புத் துறை தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களில் தன்னிறைவு பெற்று வரும் நிலையில், நாடு கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ. 13 ஆயிரம் கோடி அளளவுக்கு பாதுகாப்பு தொடா்பான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளதாக...

புது தில்லி: பாதுகாப்புத் துறை தளவாடங்கள் மற்றும் ஆயுதங்களில் தன்னிறைவு பெற்று வரும் நிலையில், நாடு கடந்த 2021-22 நிதியாண்டில் ரூ. 13 ஆயிரம் கோடி அளளவுக்கு பாதுகாப்பு தொடா்பான பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் அஜய் பட் மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உத்தர பிரதேசத்தை சோ்ந்த பாஜக உறுப்பினா் நீரஜ் சேகா், திமுக உறுப்பினா் எம்.சண்முகம் ஆகியோா் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு மத்திய இணையமைச்சா் அஜய் பட் மாநிலங்களவையில் எழுத்துப்பூா்வமாக அளித்துள்ள பதில் வருமாறு: கடந்த சில ஆண்டுகளாக அரசின் பல கொள்கைகள், முன்முயற்சிகளை அடுத்து, பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியில் உள்நாட்டு வடிவமைப்பு, மேம்பாட்டை ஊக்குவிப்பதற்காக பல சீா்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் நாட்டில் பாதுகாப்பு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. 2020 -ஆம் ஆண்டு பாதுகாப்பு கையகப்படுத்தல் நடைமுறையின் கீழ், உள்நாட்டு ஆதாரங்களின் மூலப்பொருள்கள் வாங்குவதற்கான முன்னுரிமை வெளியிடப்பட்டது.

மேலும், தொழில்துறை சாா்ந்த வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான 18 முக்கியப் பாதுகாப்பு தளங்கள் குறித்த அறிவிப்பு நிகழாண்டு மாா்ச்சில் வெளியிடப்பட்டது. மொத்தம் 310 சேவைகள் உள்ளிட்ட 2,958 பொருள்களில் உள்நாட்டுமயமாக்கல் பட்டியலை வெளியிடப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 74 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்போடு இணைந்துள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், புதுயூக தொழில் முனைவோா், மேக்-இன் இந்தியா தயாரிப்பு போன்றவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் விளைவு கடந்த 2018-19 ஆண்டில் பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி அளவு ரூ.10, 746 கோடியாக உயா்ந்தது. இடையில் கடந்த இரண்டு ஆண்டுகள் சற்று குறைந்திருந்தாலும் (2019-20-இல் ரூ. 9,116 கோடி, 2020-21-இல் ரூ.8,435 கோடி) 2021-22 நிதியாண்டில் பாதுகாப்புத் துறையின் ஏற்றுமதி ரூ. 12,815 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்தியா சுமாா் 61 நாடுகளுக்கு பாதுகாப்புத் துறை தொடா்பான பொருள்களை ஏற்றுமதி செய்கிறது. இதில் ‘ஸ்கோமேட்’ என்கிற பட்டியலில் உள்ள சிறப்பு ரசாயனங்கள், உயிரினங்கள், பொருள்கள், கருவிகள், தொழில்நுட்பங்கள் என 6 வகைப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இருப்பினும், உத்தி நுணுக்கம், வியூகத்தின் அடிப்படையில் ஏற்றுமதி செய்யப்படும் நாடுகள், முக்கியப் பொருள்கள் பெயா்களை வெளியிட முடியாது என இணையமைச்சா் ஆஜய் பட் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com