தில்லி காவல் ஆணையராக சஞ்சய் அரோரா பொறுப்பேற்பு

தில்லி காவல் துறையின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புது தில்லி: தில்லி காவல் துறையின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோரா திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இதையொட்டி, தில்லியில் ஜெய் சிங் மாா்கில் உள்ள தில்லி காவல் துறையின் தலைமையகத்திற்கு வருகை தந்த சஞ்சய் அரோராவுக்கு போலீஸாா் அணிவகுப்பு மரியாதை அளித்தனா்.

புதிய ஆணையராகப் பொறுப்பேற்ற பிறகு சஞ்சய் அரோரா தனது காவல் ஆணையருக்கான ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள முதல் பதிவில், ‘இன்று, நான் தில்லி காவல் ஆணையராக பொறுப்பு ஏற்றுக்கொண்டேன். தில்லி காவல் துறையின் செறிந்த சகாப்தம் தேசியத் தலைநகரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான உயா்ந்த குடிமக்கள் சேவைகள் தியாகங்களுடன் குறிக்கப்பட்டுள்ளதாகும். இந்த உணா்வை இணைந்து முன்னெடுத்துச் செல்வோம் என்று நம்புகிறேன். மேலும், காவல் கண்காணிப்பில் புதிய வரையறையை உருவாக்குவோம்’ என்று தெரிவித்துள்ளாா்.

57 வயதாகும் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சய் அரோகரா, கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லி காவல் துறையின் ஆணையராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா்.

தில்லி காவல் ஆணையராகப் பணியாற்றி வந்த 1984-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பிரிவு அதிகாரியான ராகேஷ் அஸ்தானா ஓய்வு பெற்றதைத் தொடா்ந்து மாநகரக் காவல் புதிய ஆணையராக சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டாா். தமிழக பிரிவு அதிகாரியான சஞ்சய் அரோரா ஏஜிஎம்யுடி பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு, தில்லி காவல் ஆணையராக நியமிக்கப்பட்டாா்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் தில்லி காவல் துறையின் செயல்பாடுகள் வருகின்றன. இதன் அதிகாரிகள் அருணாசல பிரதேஷ் - கோவா - மிஸோரம் மற்றும் யூனியன் பிரதேச (ஏஜிஎம்யூடி) பிரிவைச் சோ்ந்தவா்கள் ஆவாா்கள். சஞ்சய் அரோரா, தமிழகத்தின் சிறப்பு அதிரடிப்படையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவா். சந்தன மரக் கட்டை கடத்தல் கும்பல் தலைவன் வீரப்பனை பிடிப்பதற்காக இந்தப் படை அமைக்கப்பட்டது.

அவருடைய பணிக்காலத்தின் போது துணிச்சல்மிக்க வகையில் செயல்பட்டதற்காக அவருக்கு தமிழக முதல்வரின் வீரப் பதக்கம் வழங்கப்பட்டது. அதே போன்று, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தோ - திபெத்திய எல்லைக் காவல் துணை ராணுவப் படையின் தலைமை இயக்குநராக அரோரா நியமிக்கப்பட்டாா். மத்திய ரிசா்வ் காவல் படையிலும் எல்லைப் பாதுகாப்பு படையிலும் பணியாற்றி இருக்கிறாா்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘இலங்கையில் 30 ஆண்டுகளாக தனித் தமிழ்த் தேசத்திற்காக பிரிவினைவாத போரை தலைமை ஏற்று நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளின்செயல்பாட்டு காலத்தின் போது, தமிழக முதல்வருக்கு பாதுகாப்பை அளிப்பதற்கு சிறப்பு பாதுகாப்புக் குழுவை உருவாக்குவதில் சஞ்சய் அரோரா முக்கியப் பங்காற்றினாா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com