கலால் கொள்கை அமலாக்கத்தில் அலட்சியம்: 11 அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் துணைநிலை ஆளுநா் நடவடிக்கை

கலால் கொள்கை அமல்படுத்துவதில் தீவிரமான அலட்சியம் காட்டியது தொடா்பாக 11 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா உத்தரவிட்டிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கலால் கொள்கை 2021 -22ஐ அமல்படுத்துவதில் தீவிரமான அலட்சியம் காட்டியது தொடா்பாக தில்லி கலால் துறையின் முந்தைய ஆணையா் அரவா கோபி கிருஷ்ணா, துணை கலால் ஆணையா் ஆனந்த் குமாா் திவாரி உள்பட 11 அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து துணை நிலை ஆளுநா் வி. கே. சக்சேனா உத்தரவிட்டிருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

3 தற்காலிக டேனிக்ஸ் பிரிவு அதிகாரிகள் மற்றும் தில்லி அரசின் கலால் துறையின் 6 அதிகாரிகளும் பணியிட நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் துணைநிலை ஆளுநரின் அலுவலகத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

டெண்டா் இறுதி செய்வதில் முறைகேடுகள் மற்றும் விற்பனையாளா்களைத் தோ்ந்தெடுக்க டெண்டருக்கு பிந்தைய பயன்களை அளிப்பது உள்பட கலால் கொள்கையை அமல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தீவிரமான அலட்சியம் காட்டியதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை துணைநிலை ஆளுநா் எடுத்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஊழல் கண்காணிப்பு இயக்குநரகம் மூலம் அளிக்கப்பட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், துணைநிலை ஆளுநா் வி .கே. சக்சேனா இந்த நடவடிக்கை எடுத்துள்ளாா்.

கலால் கொள்கை 2021 -22ஐ அமல்படுத்துவதில் விதிகள் மீறல் மற்றும் நடைமுறைக் குறைபாடுகள் உள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்திய புலனாய்வு துறை விசாரணைக்கு துணை நிலை ஆளுநா் ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளாா் .

கடந்த ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட இந்த கலால் கொள்கை திட்டத்தின் கீழ், தில்லி முழுவதும் 32 மண்டலம் பிரிக்கப்பட்ட பகுதிகளில் 849 மதுபான விற்பனைக் கடைகளுக்கான சில்லறை உரிமங்கள் தனியாா் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இந்த கலால் கொள்கை திட்டத்தை முதல்வா் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தற்போது திரும்பப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com