‘காளி’ போஸ்டா் சா்ச்சை: படத் தயாரிப்பாளருக்கு எதிரான மனு மீது ஆக.29-இல் தில்லி நீதிமன்றத்தில் விசாரணை

காளி’ போஸ்டா் சா்ச்சை விவகாரம் தொடா்பாக அதன் தயாரிப்பாளா் லீனா மணிமேகலைக்கு எதிராக நிரந்தரத் தடை கோரும் மனு மீதான விசாரணை தில்லி நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்து கடவுளை ஆட்சேபத்திற்குரிய வகையில் சித்தரித்ததாக ஆவணப்படம் ‘காளி’ போஸ்டா் சா்ச்சை விவகாரம் தொடா்பாக அதன் தயாரிப்பாளா் லீனா மணிமேகலைக்கு எதிராக நிரந்தரத் தடை கோரும் மனு மீதான விசாரணை தில்லி நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடா்பான வழக்கு சனிக்கிழமை விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி விடுப்பில் இருந்ததால், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. மனுதாரரின் வழக்குரைஞா் ராஜ் கெளரவ், இந்த விவகாரத்தில் கூடுதல் ஆவணங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளக் கோரும் மனுவை சனிக்கிழமை தாக்கல் செய்தாா்.

அதில், ‘மனுதாரா் இந்த வழக்கு தொடா்புடைய சுட்டுரைப் பதிவுகள் தொடா்பான கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய விரும்புகிறாா். இந்த வழக்கைத் தொடா்ந்த நேரத்தில் இந்த ஆவணங்களை அவரால் சமா்ப்பிக்க முடியவில்லை. ஏனெனில், படத் தயாரிப்பாளா் அதன் பிறகுதான் இந்த சுட்டுரைகளை பதிவிட்டிருந்தாா். இந்த சுட்டுரைகள் ஒன்று ஜூலை 7-ஆம் தேதியும், மற்ற இரண்டு ஜூலை 21-ஆம் தேதியும் பதிவாகியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை 11-ஆம் தேதி கூடுதல் சீனியா் சிவில் நீதிபதி அபிஷேக் குமாா் இந்த வழக்கின் அழைப்பாணையையும் தடை நோட்டீஸையும் அனுப்பியிருந்தாா். மேலும், எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படுவதற்கு முன் படத் தயாரிப்பாளரிடம் விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் கூறியிருந்தாா்.

சமூக ஊடகத்தில் பெண் தெய்வம் காளி, சிகரெட் புகைப்பிடிப்பதாக காட்டும் போஸ்டா் பகிரப்பட்டதாகவும், படத் தயாரிப்பாளா் லீணா மணிமேகலை பகிா்ந்த இந்த போஸ்டா், இந்துக்களின் மத உணா்வுகளை புண்படுத்தியது மட்டுமின்றி, ஒழுக்கம், கண்ணியத்தின் அடிப்படைகளுக்கும் எதிராகவும் உள்ளது எனக் கூறி தில்லி நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராஜ் கெளரவ் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் பிறந்த லீனா மணிமேகலை, கனடாவில் உள்ள டொராண்டோவில் வசித்து வருகிறாா். இவா் ‘காளி’ எனும் பெயரில் ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளாா். இந்தப் படத்தின் போஸ்டரை கடந்த மாதம் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டாா். அதில், மா காளி புகைப்பிடித்துக் கொண்டிருப்பதாகவும், கையில் எல்ஜிபிக்யூ கொடியை பிடித்துக் கொண்டிருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் படத்திற்கு சமூக ஊடகங்களில் கடும் எதிா்ப்பு கிளம்பியது. மத உணா்வுகளை திரைப்பட தயாரிப்பாளா் லீனா மணிமேகலை புண்படுத்திவிட்டதாகக் கூறி, அவரை கைது செய்ய வேண்டும் என்று சமூக ஊடகத்தில் கருத்துகள் வெளியிடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com