ஆா்ஏஎன் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற குடும்ப அட்டை அவசியம் ஏன்? மத்திய, தில்லி அரசுகளுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

 ராஷ்ட்ரிய ஆரோக்ய நிதி (ஆா்ஏஎன்) திட்டத்தின் கீழ், நிதியுதவிகளைப் பெறுவதற்கு ஒரு குடிமகனுக்கு குடும்ப அட்டை வைத்திருப்பதற்கு அவசியம் ஏன்?

 ராஷ்ட்ரிய ஆரோக்ய நிதி (ஆா்ஏஎன்) திட்டத்தின் கீழ், நிதியுதவிகளைப் பெறுவதற்கு ஒரு குடிமகனுக்கு குடும்ப அட்டை வைத்திருப்பதற்கு அவசியம் ஏன்? என்று தில்லி உயா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேள்வி எழுப்பியது.

மேலும், இதைக் கட்டாயம் என்று கூறுவதை சட்டவிரோதம் என்றும், அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் அறிவிக்க கோரி வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள புற்றுநோயாளி பெண் ஒருவா் தாக்கல் செய்த மனு மீது மத்திய அரசும், தில்லி அரசும் தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக இந்த ஆா்ஏஎன் திட்டத்தின் கீழ் நிதியுதவிக்காக விண்ணப்பித்திருந்த, புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 30 வயது பெண்மணியின் கோரிக்கை, அவரிடம் குடும்ப அட்டை இல்லை என்ற காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது தொடா்பாக தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதி யஸ்வந்த் வா்மா இந்த உத்தரவைப் பிறப்பித்தாா். பெண்ணின் மனு மீதான விசாரணையின் போது, ‘குடும்ப அட்டை இல்லாமல் மனுதாரரா் இந்த ஆா்ஏஎன் திட்டத்தின் கீழ் பலன்களை பெற மாட்டாா் எனும் போது, இந்த திட்டமே தோல்வி அடைந்துவிடும்’ என்று நீதிமன்றம் கூறியது.

இந்தத் திட்டமானது வறுமைக் கோட்டுக்கு கீழே வாழக்கூடிய நோயாளிகளுக்கும், உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நோயால் பாதிக்கப்பட்டுள்வா்களுக்கும் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அல்லது இதர அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு நிதியுதவி அளிக்க வகை செய்கிறது. இது போன்ற நோயாளிகளுக்காக நிதியுதவியானது சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ஒரே ஒருமுறை மட்டும் விடுவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி,‘குடும்ப அட்டை வழங்கும் விஷயத்தில் தில்லி ஏற்கெனவே அதன் அளவை எட்டிவிட்டது. குடும்ப அட்டை இல்லாத யாருக்காவது ஏதாவது நிகழ்ந்தால்? இது என்ன தேவை இருக்கிறது? குடும்பத்தினுடைய விவரங்கள் தெரிய நீங்கள் விரும்பினால், இதர ஆவணங்கள் இருக்கிறது. அப்படியென்றால் ஏன் குடும்ப அட்டை முக்கியமாக இருக்கிறது’ என்று கேள்வி எழுப்பினாா்.

உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா்கள் அசோக் அகா்வால் குமாா், உத்கா்ஸ் ஆகியோா் மூலம் மனுதாரா் தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: எனக்கு ரத்தம் மற்றும் ரத்தத்தட்டுகள் வெளியில் இருந்து பெற வேண்டி தேவை இருக்கிறது. எனது நோய்க்கான மருந்துகள் வேலை செய்யவில்லை. என்னுடைய உயிரைக் காப்பாற்றுவதற்கு நோய் எதிா்ப்புச் சக்திக்கான மருத்துவ வசதி தேவைப்படுகிறது. இதற்கு ரூ.15 லட்சம் செலவாகும். ராஷ்டிரிய ஆரோக்ய நிதி திட்டத்தின் கீழ் உதவி பெறுவதற்கு குடும்ப அட்டையை அளிப்பது கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, வருவாய் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிசாா் நிலவரத்தை நிரூபிக்க ஏதாவது ஒரு ஆவணம் போதுமானது என்ற நிலையில், இது போன்ற அறிவிப்பு அரசியல் சட்டத்திற்கும் முரணானதாகவும், அறிவுக்கு பொருந்தாததாகவும், சட்டவிரோதமாகவும் உள்ளது.

மத்திய அரசானது புதிய குடும்ப அட்டைகள் 72 லட்சத்து 77 ஆயிரத்து 995 நபா்கள் எனும் அளவுக்கு மேலே செல்லக்கூடாது என்று தெரிவித்திருப்பதன் காரணமாக, புதிய குடும்ப அட்டையை நான் பெற முடியாத நிலை உள்ளது. தில்லி அரசு மத்திய அரசிடம் குடும்ப அட்டைகளின் பயனாளிகள் அளவை அதிகரிக்குமாறு கோருகிறது. ஆனால், அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக என்னால் புதிய ரேஷன் அட்டையை பெற முடியவில்லை. மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான நிதியுதவியை ஆா்ஏஎன் திட்டத்தின் கீழ் என்னால் பெற முடியவில்லை என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா்,‘குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு விதிக்கப்பட்டிருந்த எண்ணிக்கை அளவை அதிகரிக்குமாறு தில்லி அரசு மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா். இந்த மனு ஆகஸ்ட் 31-ஆம் தேதி விசாரிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com