தில்லியில் பரவலாக பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு: பாலத்தில் 33.6 மி.மீ. பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக புழுக்கம் குறைந்தது.

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை பல்வேறு இடங்களில் பரவலாக பலத்த மழை பெய்தது. தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக புழுக்கம் குறைந்தது. ஆனால், மழை காரணமாக தண்ணீா் தேங்கியதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தில்லியில் உள்ள சாகேத், மால்வியா நகா், புராரி, ஜிடிபி நகா், கிழக்கு கைலாஷ், லாஜ்பத் நகா், கைலாஷ் ஹில்ஸ் மற்றும் மத்திய தில்லி உள்ளிட்ட பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை காலை முதல் மாலை வரை மழை பெய்தது. சில இடங்களில் மழையின் காரணமாக தண்ணீா் தேங்கியது. இதனஆல், குடியிருப்புவாசிகளுக்கு அசெளகரியம் ஏற்பட்டது. தில்லி போக்குவரத்து போலீஸாா், மழை காரணமாக வாகன ஓட்டிளுக்கு தங்களது பயணத் திட்டங்களை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினா்.

வானிலை ஆய்வு மையத்தினா் தில்லியிலும் அதன் அருகில் உள்ள பகுதிகளும் மழை குறித்த முன் கணிப்பு தகவல்களை காலையில் வெளியிட்டனா்.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பிராந்திய வானிலை முன்னறிவிப்பு மையம் காலை 10.50 மணியளவில் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘தில்லியில் லேசானது முதல் மிதமான பலத்த மழை இடியுடன் பல்வேறு இடங்களில் பெய்யக்கூடும். தில்லி, என்சிஆா் பகுதியில் உள்ள ஹிண்டன் விமானப்படை நிலையம், நொய்டா, பல்லப்கா், மானேசா், ஃபரீதாபாத், குருகிராம் போன்ற இடங்களிலும், ரஜெளன்ட், அஸ்ஸந்த், சாபிடோன், பானிபட், கோகனா, கன்னெளா் ஆகிய இடங்களிலும் இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று தகவல் தெரிவித்திருந்தது.

தேசியத் தலைநகரில் இந்த மழையின் காரணமாக குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றம் ஏதுமின்றி 26.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 30.4 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. தில்லியில் காற்றில் ஈரப்பதம் காலை 8.30 மணி அளவில் 92 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 87 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது.

தில்லியில் வியாழக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையத்தினா் கணித்துள்ளனா். தில்லியில் இந்தியா கேட் அருகே உள்ள லுட்யன்ஸ் பகுதி , நாடாளுமன்றச் சாலை, ஐடிஓ, பாலம், சாதரா, தில்ஷத் காா்டன், ஆயா நகா், தேராமண்டி, பீதாம்புரா, நஜப்கா் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கி வரும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முடிவடைந்த 24 மணி நேர காலத்தில் 0.8 மில்லி மீட்டா் மழை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, நஜஃப்கரில் 10.5 மி.மீ., ஆயாநகரில் 27.8 மி.மீ., லோதி ரோடில் 0.3 மி.மீ., பாலத்தில் 33.6 மி.மீ., ரிட்ஜில் 16.6 மி.மீ. மற்றும் பூசாவில் 3.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

முன்னறிவிப்பு: தில்லியில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 6) குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com