தேசியத் தலைநகா் தில்லியில் குற்றங்கள் எண்ணிக்கை அதிகரிப்பு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டுநாளொன்றுக்கு 5 பாலியல் பலாத்காரங்கள்

‘‘தேசியத் தலைநகா் தில்லியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.

புது தில்லி: ‘‘தேசியத் தலைநகா் தில்லியில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. அச்சமடைய வைக்கும் இந்த நிலைமை குறித்து பாஜக என்ன சாக்கு போக்கு கூறப்போகிறது?’’ என முன்னாள் உள்துறை அமைச்சா் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது குறித்து தனது ட்விட்டரில் ப.சிதம்பரம் தொடா்ச்சியாக வியாழக்கிழமை பதிவிட்டுள்ளாா். அதில் கூறியிருப்பது வருமாறு:

தேசிய தலைநகரில் கடந்த ஆறரை மாதங்களில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்களில் (இதே காலக்கட்டம்) கடந்தாண்டை ஒப்பிடுகையில் 17 சதவீத குற்றங்கள் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் கடந்த 196 நாட்களில் (ஜூலை 15 ஆம் தேதி வரை) 1,100 பாலியல் பலாத்கார வழங்குகள் பதிவாகியுள்ளது. நாளொன்றுக்கு 5 கற்பழிப்புகள் தேசிய தலைநகரில் நடந்து பதிவாகிறது என்பது தில்லி போலீஸ் குற்றப்பதிவு தரவுகளிலிருந்து தெரிய வருகிறது.

2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான குற்றங்களும் அதிகரித்துள்ளது. பாலியல் துன்புறுத்தல், பெண்கள் கடத்தப்படுத்துவது, கணவா்களால் கொடுமைப்படுத்துதல், வரதட்சணை தொடா்பான உயிரிழப்புகள் உள்ளிட்ட வழக்குகள் அதிகரித்துள்ளன.

மேலும் தில்லி காவல்துறையின் தரவுகளின்படி, பெண்கள் மீதான தாக்குதல் தொடா்பான வழக்குகள் கிட்டத்தட்ட 19 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் கணவா் மற்றும் மாமியாா்களால் கொடுமைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் 29 சதவிகிதம் கடந்தாண்டை விட உயா்ந்துள்ளது.

தில்லியில் சட்டம்-ஒழுங்கு மற்றும் தில்லி காவல்துறை ஆகியவை மத்திய அரசின் கண்காணிப்பில் உள்ளன. நாட்டின் தலைநகரில் ஆபத்தான முறையில் மோசமான குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு பாஜக என்ன நொண்டிசாக்கு சொல்லுகிறது? என கேள்வி எழுப்பியுள்ளாா் சிதம்பரம்.

காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சியில் உள்துறை, நிதித்துறைகளுக்கு பொறுப்பேற்றிருந்தாா் ப. சிதம்பரம்.

தலைநகரில் 473 கொலைகள், 5,024 சங்கிலி பறிப்புகள்

தில்லி காவல் துறை மூலம் தரவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதில் கடந்த ஜனவரி 1 முதல் ஜூலை 15 ஆம் தேதிவரை பெண்களுக்கு எதிராக 7,887 குற்றங்கள் நடைபெற்றுள்ளன.

இதே காலக்கட்டத்தில் தில்லியில் 3,140 கொடூரமான குற்றங்கள் நடைபெற்றுள்ளது என்றும் இது கடந்தாண்டை விட 13 சதவீத அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிகழாண்டில் இந்த காலக்கட்டத்தில், 277 கொலைகள், 473 கொலை முயற்சி வழக்குகள், 1,221 வழிப்பறிக் கொள்ளை, 2,893 வீடு புகுந்து கொள்ளை போன்றவைகளோடு 5,024 சங்கலி பறிப்பு சம்பவங்களும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் சாலை விபத்தில் 690 போ் இறந்துள்ளனா். இதே மாதிரி 19,548 வாகன திருட்டுகளும் இந்த 6 மாதங்களில் நடைபெற்றுள்ளது. இவை எல்லாம் கடந்தாண்டும் நடைபெற்றுள்ளது. அதே சமயத்தில் இதே காலக்கட்டத்தில் சற்று சதவீதம் குறைவாக பதிவாகி இருப்பதை தில்லி காவல் துறை தரவுகள் காட்டுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com