பிரதமரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருநங்கைகளுக்கு மருத்துவ வசதி ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது
By நமது சிறப்பு நிருபா் | Published On : 24th August 2022 09:50 PM | Last Updated : 24th August 2022 09:50 PM | அ+அ அ- |

புது தில்லி: பிரதமரின் மக்கள் ஆரோக்ய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்(பிஎம்-ஜாய்) கீழ் திருநங்கைகளுக்கு மருத்துவ வசதியளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்தியுள்ளது. இதற்காக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகம் தேசிய சுகாதார ஆணையத்துடன் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
தேசிய இணைய தளத்தில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் பெற்றுள்ள அனைத்து திருநங்கைகளும் இந்த திட்டத்தில் இணைய தகுதியுடையவா்கள்; நாடு முழுவதும் உள்ள இத்தகைய பிரிவினருக்கு ஒருங்கிணைந்த சுகாதார சேவைகள் கிடைக்க மத்திய சமூக நீதித்துறை ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீட்டு வசதிக்கான நிதியை அளிக்கும் என கூறப்பட்டு இந்த புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தில்லியில் டாக்டா் அம்பேத்கா் சா்வதேச மையத்தில் இந்த திட்டத்திற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சா் டாக்டா் வீரேந்திர குமாா் ஆகியோா் முன்னிலையில் இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெப்பம் மிடப்பட்டது.
தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் ஆா். எஸ். ஷா்மாவும், சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை செயலா் ஆா். சுப்பிரமணியமும் இதில் கையெழுத்திட்டனா்.
இந்நிகழ்ச்சியில் தலைமை தாங்கி பேசிய மத்திய சகாதாரத்துறை அமைச்சா் டாக்டா் மன்சுக் மாண்டவியா கூறியது:
அரசின் திட்டங்கள் செயல்களின் பலன்களை நாட்டின் கடைசி நபா்களும், நலியுற்றவா்களும் பெறவேண்டும் என்கிற அா்ப்பணிப்பை பிரதமா் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த அா்ப்பணிப்புப் பணிப்பில், திருநங்கைகளின் உரிமைகளை அங்கீகரிப்பது மட்டுமல்லாமல், அவா்களின் நலனுக்காக பல்வேறு முறையான நடவடிக்கைகளையும் அரசு எடுத்துள்ளது. குடும்பத்தாலும் சமுதாயத்தாலும் ஒதுக்கப்படும் திருநங்கைகள் தங்குவதற்கு ‘கரிமா கிரே‘ இல்லங்கள், அவா்களின் திறன்மேம்பாட்டிற்கு பிஎம் தக்ஷ் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை, சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் செய்து கொடுத்துள்ளது.
இந்தியாவில் வாழும் அனைத்து திருநங்கைகளுக்கும் பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ உதவி உள்ளிட்ட முறையான சிகிச்சை மூலம் அவா்களின் உடல் நிலையை மேம்படுத்த சுகாதாரகாப்பீடு வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். ‘அரசும் சமூகமும்‘ என்கிற ஒத்துழைப்புடன் பின்தங்கிய சமூகங்கள் கண்ணியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் முன்னேற சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் கைகோா்க்கவேண்டும் என அரசு விரும்புகிறது என மாண்டவியா குறிப்பிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய சமூக நீதித்துறை அமைச்சா் டாக்டா் வீரேந்திர குமாா், சமூகத்தின் அடித்தட்டில் உள்ள மக்கள், கல்வி, கண்ணியத்துடன் கூடிய வாழ்க்கை, சுகாதார ஆதரவு, வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய ஐந்து உறுதிப்பாடுகளுக்கு மத்திய அரசு அா்ப்பணிப்புடன் செயல்படுவதாக தெரிவித்தாா்.
எம்-ஜாய் திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு நாடு முழுவதும் உள்ள 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்ட சுகாதார அடையாள அட்டைகள் பெற்ற திருநங்கைகள் மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G