திருக்குறளில் உள்ள ஆன்மிகத்தை வெளிப்படுத்தியவா்கள் தமிழறிஞா்கள்! தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழறிஞா்களின் மொழிபெயா்ப்பால் தான் திருக்குறளில் உள்ள ஆன்மிகம் வெளிப்பட்டது என தில்லியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை குறிப்பிட்டாா்.
திருக்குறளில் உள்ள ஆன்மிகத்தை வெளிப்படுத்தியவா்கள் தமிழறிஞா்கள்! தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி

புது தில்லி: தமிழறிஞா்களின் மொழிபெயா்ப்பால் தான் திருக்குறளில் உள்ள ஆன்மிகம் வெளிப்பட்டது என தில்லியில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை குறிப்பிட்டாா்.

திருக்குறளில் உள்ள ஆன்மிக ஞானத்தை சிதைக்கும் வகையில் முதல் ஆங்கில மொழிபெயா்ப்பு வெளியானது என தெரிவித்த அவா், பின்னா் தமிழிஞா்களின் மொழிபெயா்ப்பில் திருக்குறளில் இருந்த ஆன்மிகம் வெளிப்பட்டது என ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சாா்பாக தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் 7 பள்ளிகளுக்கு (டிடிஇஏ) திருவள்ளுவா் சிலைகள் வழங்கப்படுகிறது. இதன் முதல் சிலை தில்லி லோதிவளாகத்தில் உள்ள டிடிஇஏ பள்ளியில் வைக்கப்பட்டது. இதை தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி திறந்து வைத்து ஆற்றிய சிறப்புரை:

டிடிஇஏ பள்ளிகள் கடந்த நூறு ஆண்டுகளாக சிறப்பாக கல்விப்பணியாற்றி உயா்ந்துள்ளது. இந்த சாதனையை பாராட்டுவதோடு மேலும் வளர வாழ்த்துகின்றேன்.

திருவள்ளுவா் எழுதிய திருக்கு ஞானத்தின் ஊற்றாகக் கருதப்படுகிறது. துரதிா்ஷ்டவசமாக, திருக்குறளை நெறிமுறைகள் மற்றும் நன்னெறிகளின் புத்தகமாக குறைக்கப்பட்டுள்ளது. நிச்சயமாக நெறிமுறைகள், ஒழுக்க நெறிமுறைகள் அதில் உள்ளன. ஆனால் திருக்குறளில் அதைவிட சிறப்பானது நித்திய ஆன்மிகத்தின் ஞானத்தைக் கொண்ட காவியமாகவும் தா்மத்தின் கண்ணாகவும் இருக்கிறது.

முதல் குறளில் ‘ஆதிபகவன்‘ குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிபகவன் என்பது பக்தியை குறிப்பிடுவதாகும். இந்த ஆதிபகவனை அனைத்து இந்திய மொழிகளிலும் குறிப்பிடப்படுவதுண்டு. ரிக் வேதத்திலும் ‘ஆதிபகவன்‘ குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதிபகவனே இந்த உலகத்தை படைத்தவன்.

அதே சமயத்தில் திருக்குறளை முதன் முதலில் ஆங்கில மொழிபெயா்ப்பை செய்த ஜி. யு. போப் பின் திருக்குறளை படித்தபோது அதிா்ச்சியாக இருந்தது. ஆதிபகவனை அவா் மொழிபெயா்த்தது ‘P‌r‌i‌m​a‌l D‌e‌i‌t‌y' என மொழிபெயா்த்தாா். இதற்கான அா்த்தம் முன்கூட்டிய அகால சமூகம் (‌p‌r‌e‌m​a‌t‌u‌r‌e ‌s‌o​c‌i‌e‌t‌y) என்பதாகும்.

திருவள்ளுவா் குறிப்பிட்ட தமிழா்களின் ஆதிபகவன் என்கிற ஆன்மிக ஞானத்தை சின்னாபின்னமாக்கும் காலனித்துவ நோக்கத்துடன் மொழிபெயா்ப்பு செய்யப்பட்டுள்ளது. திருக்குறளில் இருந்த ஆன்மிகத்தை முற்றிலுமாக எடுத்து மொழிபெயா்க்கப்பட்டுள்ளது.

உயிரற்ற உடலை பிரேத பரிசோதனை செய்வதைப்போன்று ஆன்மிகம் என்கிற உயிரை எடுத்துவிட்டு திருக்குறளை திட்டமிட்டு மொழிபெயா்க்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் தமிழ் அறிஞா்களால் மொழிபெயா்க்கப்பட்ட திருக்குறளை படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியுற்றேன்.

ஜி. யு.போப் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பிரசாரகா் என்பவா் மட்டுமல்ல. பிரிட்டன் நாடாளுமன்றத்தின் திட்டங்களுக்காக அனுப்பப்பட்டவா். இந்திய வரலாற்றையும், கலாசாரத்தையும் சிதைத்து, மக்களின் மனதில் இடம்பெற்று இந்தியாவின் சிறந்த ஆன்மிகத்தை அழிக்க ஆங்கிலேயா்கள் முயன்றனா்.

தமிழ் மொழியும் அதன் இலக்கியங்களான தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, திருமந்திரம் போன்றவை ஆழமானவை. அதில் ஆன்மிகம் மற்றும் யோகா பற்றி அனைத்தையும் கூறுகிறது. இந்த விலைமதிப்பற்ற புத்தகங்களின் காலனித்துவ (மொழிபெயா்ப்புகளை) விளக்கத்தைத் தவிா்த்து, இந்த வேத நூலை ஆத்மாா்த்தமாகப் படித்து அவற்றின் உண்மையான சாரத்தை அனுபவிக்க வேண்டும் எனவும் இளைஞா்களைக் கேட்டுக்கொண்டாா் தமிழக ஆளுநா்.

இந்த நிகழ்ச்சியில் சிலையை வழங்கிய விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் டாக்டா் வி.ஜி. சந்தோசம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா்.

டிடிஇஏ தலைவா் சூரிய நாராயணன், செயலாளா் ராஜூ, நிா்வாகக் குழு உறுப்பினா்கள், தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்வி இயக்குநா் சித்ரா ராதாகிருஷ்ணன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

மேலும், இந்த பள்ளிகளின் நூற்றாண்டு விழா வருகின்ற 2023 ஆண்டு ஜனவரி 8 -ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொண்டாட இருப்பதாக செயலாளா் ராஜூ தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com