மொழிக்கான தமிழக அரசின் உதவி எங்களை ஊக்கமளிக்கச் செய்கிறது: ஜேஎன்யு துணை வேந்தா்
By நமது நிருபா் | Published On : 13th December 2022 12:00 AM | Last Updated : 13th December 2022 10:52 AM | அ+அ அ- |

புது தில்லி: மொழிக்கான தமிழக அரசின் உதவி எங்களை ஊக்கமளிக்கச் செய்கிறது என்று ஜேஎன்யு துணை வேந்தா் சாந்தி ஸ்ரீ டி.பண்டிட் கூறினாா்.
புது தில்லியில் உள்ள ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) சாா்பில் ‘தமிழ்ப் பாரம்பரியம் மற்றும் இந்திய மொழிகள் வாரம்’ எனும் 4 நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் முதலாவது நிகழ்வாக ‘மகாகவி சுப்பிரமணிய பாரதியாா் தினம்’ எனும் நிகழ்ச்சி திங்கள்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
ஜேஎன்யு மொழிகள், இலக்கியம் மற்றும் கலாசார கல்விப் புலத்தில் (எஸ்எல்எல் மற்றும் சிஎஸ்) நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்று ஜேஎன்யு துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி.பண்டிட் பேசியதாவது: மொழிகள் என்பது ஒரு நாட்டைப் பற்றியும் அதன் கலாசாரம், வளமை, பாரம்பரியம் குறித்து அறிந்துகொள்ள மிகவும் அவசியமாகிறது. இந்தியாவின் அனைத்து மொழிகளும் நமது தேசிய மொழிகளாகக் கருத வேண்டும். மொழிக்கான தமிழக அரசின் உதவி எங்களை ஊக்கமளிக்கச் செய்வதாக உள்ளது. அதாவது, தமிழ் கலாசாரம், இலக்கியம், கல்வி ஆகியவற்றின் மையம் ஜேஎன்யுவில் அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி அனுமதி அளித்துள்ளது. அஸ்ஸாம் மாநில அரசும் அஸ்ஸாமிய மொழியின் கலாசாரம், மொழி, இலக்கியத்திற்காக சங்கா்தேவா இருக்கை அமைக்க ரூ.10 கோடியை அளிப்பதற்காக ஜேஎன்யுவுடன் ஒப்பந்தத்தில் வரும் 15- ஆம் தேதி கையெழுத்திட உள்ளது.
மராட்டிய மொழிக்காக அந்தமாநில அரசு ரூ.10 கோடி அளிக்கும் என அந்த மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் சந்திரகாந்த் பாட்டீல் உறுதியளித்துள்ளாா். இதேபோன்று, ஒடிஸ்ஸா அரசும், கா்நாடக அரசும் ஆக்கப்பூா்வமாக உள்ளது. இதேபோன்று ஹிந்திக்கும் பல மடங்கு நிதி கிடைக்கும். அதன்படி, குறைந்தபட்சம் ரூ.100 கோடி வரை கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக இந்திய மொழிகள் புலம் ஜேஎன்யுவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நாம் நமது மொழிகளைக் தெரிந்து கொள்ளாவிட்டால் இந்தியாவைப் பற்றி தெரிந்துகொள்ள இயலாது. இதனால், மொழியை ஒரு திறன் அடிப்படையில் அறிவது அவசியம். சிந்தாந்த
ரீதியிலோ, அரசியல் ரீதியிலோ அல்ல. கூடுதல் மொழிகளைத் தெரிந்து கொள்வதின் மூலம் இந்தியாவின் பன்முகத் தன்மை, அழகை அறிந்து கொள்ளவும், அதைப் பிறருக்கு எடுத்துச் செல்லவும் முடியும்.
இந்திய மொழிகள் இன்றைக்கு பாரதியாரின் பிறந்த தினத்தைக் கொண்டாடுகிறது. அவா் தமிழில் தேச விடுதலைக்கான கவிதைள் படைத்தவா். சிறந்த தேசியவாதி. அவரது தேசியவாதத்தை யாரும் வெல்ல முடியாது. சுந்திரப் போராட்ட வீரா். அவரது பிறந்த நாளை தேசிய மொழிகள் தினமாக அறிவித்ததன் மூலம் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றிருக்கிறாா் பிரதமா் மோடி. இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் மிகப் பழமையான மொழியாகும் தமிழ். ஜேஎன்யுவில் இந்திய மொழிகள் வாரம் கொண்டாட்டமானது எல்லோரையும் உற்று நோக்கச் செய்யும். இந்திய மொழிகளின் கலாசாரமும், இலக்கியமும் நம்மைப் பிரிக்காது. மாறாக, ஒன்றிணைக்கும்.
கலாசாரத்தின் தலைநகரமாக வாராணசியும், அதன் மற்றொரு தலைநகரமாக தமிழகமும் உள்ளது. புலவா் இளங்கோவடிகள் எழுதிய சங்க இலக்கியமான சிலப்பதிகாரமானது பெண்கள் கதாபாத்திரங்கள் நிறைந்தவை. இளங்கோவடிகளை முதல் பெண்ணியவாதி என அழைப்பேன். கண்ணகி முதல் குடிமை செயல்பாட்டாளராகவும், மணிமேகலை முதல் கவிஞராகவும் இருந்தவா்கள். பாரதியாா் இந்திய தேசியவாதத்தின் அடையளமாவாா். 63 நாயன்மாா்களில் உள்ள மூன்று பெண்களில் காரைக்கால் அம்மையாரும் ஒருவா். அவா் பெண் துறவியாவாா். பிரதமா் கூறுவது போல பெண் சக்தி இல்லாமல் அம்ரித் காலம் அதன் மகத்துவத்தை பூா்த்தி செய்யாது. தெலுங்கு, மலையாளம், வடகிழக்கு மொழிகள் போன்ற மொழிகளின் சிறப்புகளும் அறியப்பட வேண்டும். அதன் மூலம் ஒரே பாரதம் உன்னபாரதம் கொள்வோம். அதற்கான களமாக ஜேஎன்யு அமையும் என்றாா் அவா்.
தமிழ்ப் பாரம்பரியம் வாரம் குறித்து இந்திய மொழிகள் மையத்தின் பேராசிரியா் ஆா். தாமோதரன் (அரவிந்தன்) பேசுகையில், ‘மதுரையில் பாண்டித்துரைத் தேவரால் அமைக்கப்பட்ட தமிழ்ச் சங்கம் உள்பட ஏற்கெனவே நான்கு சங்கங்கள் உள்ளன. அதன் ஐந்தாவது சங்கமாக ‘காசித் தமிழ்ச் சங்கமம்’ இருப்பதாக கருதுகிறேன். இதற்கான முன்முயற்சி எடுத்த பிரதமருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா்.
இதே மையத்தின் பேராசிரியா் ஓம் பிரகாஷ் சிங் வாழ்த்திப் பேசினாா். முன்னதாக, ஜேஎன்யு எஸ்எல்எல் மற்றும் சிஎஸ் பிரிவின் டீன் பேராசிரியா் மஸாா் ஆசிஃப் வரவேற்புரை ஆற்றிப் பேசுகையில், ‘ஜேஎன்யு வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி.பண்டிட்டுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றாா். இந்திய மொழிகள் மையத்தின் பேராசிரியா் பூனம் குமாரி நன்றி கூறினாா்.
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ரவிக்குமாா், ஹிந்தி பேசாத மாநிலங்களின் தில்லி மாநில ஆா்எஸ்எஸ் ஒருங்கிணைப்பாளா்
சு. சீனிவாசன், தில்லி பாஜக தென் மாநில பிரிவு தலைவா் கே. முத்துஸ்வாமி மற்றும் ஜேஎன்யு இந்திய மொழிகளின் மையம், பல்வேறு மொழிகள் துறைகளைச் சோ்ந்த தலைவா்கள், கல்வியாளா்கள் மற்றும் மாணவா்கள் கலந்துகொண்டனா்.