ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருப்பது எனக்குத் தெரியாது: நீதிமன்றத்தில் ஆஃப்தாப் தகவல்

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று ஆஃப்தாப் ஆமின் பூனாவாலா கூறினாா்

தில்லி மெஹ்ரௌலி பகுதியில், திருமணம் ஆகாமல் தன்னுடன் வசித்து வந்த ஷ்ரத்தா வால்கா் என்ற இளம் பெண்ணை கழுத்தை நெரித்துக் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டியதாகக் கூறப்படும் சம்பவத்தில் கைதான ஆஃப்தாப் ஆமின் பூனாவாலா, தில்லி நீதிமன்றத்தில் காணொலி மூலம் சனிக்கிழமை ஆஜரானாா். அப்போது, தனது சாா்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறினாா்.

தில்லி நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக கூடுதல் நீதிமன்ற நீதிபதி விருந்தா குமாா் முன் ஆஜரான பூனாவாலா, ‘வக்காலத்து நாமா ஆவணத்தில் நான் கையெழுத்திட்டு இருந்தேன். ஆனால், எனது சாா்பில் நீதிமன்றத்தில் எனது வழக்குரைஞா் மூலம் ஜாமீன் கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பது குறித்து எனக்கு ஏதும் தெரியாது’ என்று தெரிவித்தாா்.

இதையடுத்து, நீதிபதி கூறுகையில், ‘ஜாமீன் மனு நிலுவையில் வைக்கப்பட வேண்டும். குற்றம் சாட்டப்பட்ட நபா் தனது வழக்குரைஞரைச் சந்தித்த பிறகுதான் இந்த மனு வலியுறுத்தப்பட வேண்டுமா அல்லது இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும்’ என்று தெரிவித்தாா். மேலும், ‘பூனாவாலா அண்மையில் தனியாக வழக்குரைஞா் எம்.எஸ். கானை நியமித்திருந்தாா். அவா், பூனாவாலாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டிருந்தாா். ஜாமீன் மனு தவறுதலாகத் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக மின்னஞ்சல் மூலம் நீதிமன்றத்திற்கு பூனாவாலா தகவல் தெரிவித்திருந்தாா். இதனால், ஜாமீன் மனுவை தாக்கல் செய்வதற்காக கானுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்ட நீதிமன்றம், இந்த விவகாரம் தொடா்புடைய அடுத்த விசாரணையை டிசம்பா் 22-ஆம் தேதிக்கு நீதிமன்றம் பட்டியலிட்டது.

முன்னதாக, விசாரணையின்போது, காணொலியில் ஆஜரான பூனாவாலாவிடம், ஜாமீன் மனுவை திரும்பப் பெற விரும்புகிறீா்களா என நீதிபதி கேட்டாா். அதற்கு, எனது வழக்குரைஞா் என்னுடன் பேசுவதற்கு விரும்புகிறேன். அதன்பிறகு ஜாமீன் மனுவை திரும்பப்பெற விரும்புகிறேன் என்றாா். அடுத்த விசாரணையின்போது காணொலி வாயிலாக பூனாவாலா ஆஜா்படுத்தும் தேவை உள்ளதா என சிறப்பு அரசு வழக்குரைஞா் அமித் பிரசாத்திடம் நீதிமன்றம் கேட்டது. அதற்கு நோ்மறை பதிலை அவா் அளித்தாா்.

கடந்த வியாழக்கிழமை பூனாவாலாவின் ஜாமீன் கோரும் மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த டிசம்பா் 9-ஆம் தேதி அவரது நீதிமன்றக் காவல் 14 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com