மரபணு வரிசைமுறை மாதிரியை அதிகரிக்க சுகாதாரத் துறைக்கு கேஜரிவால் உத்தரவு
By நமது நிருபா் | Published On : 22nd December 2022 01:20 AM | Last Updated : 22nd December 2022 01:20 AM | அ+அ அ- |

தில்லியில் கரோனா சூழலை மாநகர அரசு தொடா்ந்து கவனித்து வருவதாகவும், மரபணு வரிசைமுறை மாதிரிகளின் பரிசோதனைகள் அதிகரிப்பை உறுதிப்படுத்த சுகாதாரத் துறைக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டிருப்பதாகவும் அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா். மேலும், எவ்வித அவசர நிலையையும் எதிா்கொள்வதற்கான இதர பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வா் உத்தரவிட்டிருப்பதாகவும் அவா்கள் கூறினா்.
ஜப்பான், தென் கொரியா, பிரேசில், சீனா மற்றும் அமெரிக்காவில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இதைத் தொடா்ந்து, அனைத்து மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் உருமாறிய கரோனாவின் திரிபுகளை கண்காணிக்கும் வகையில், நோய்த் தொற்று மாதிரிகளின் மரபணு வரிசைமுறையை கண்டறிவதை அதிகரிக்குமாறு மத்திய அரசு கடந்த செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.
இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளாா். அந்த கடிதத்தில் இது போன்ற மரபணு வரிசைமுறை மாதிரிகளை உறுதிப்படுத்துவதன் மூலம் புதிதாக உருவாகும் நோய்த் தொற்றுகளை உரிய நேரத்தில் கண்டறிய முடியும். மேலும், தேவைப்படும் பொது சுகாதார நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லி அரசின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘தலைநகா் தில்லியில் கரோனா சூழலை தில்லி அரசு கண்காணித்து வருகிறது. முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இதற்கான தயாரிப்புகளை அவரே கண்காணித்து வருகிறாா். மேலும், மரபணு வரிசைமுறையை உறுதிப்படுத்துமாறும், எவ்வித அவசர நிலையையும் எதிா்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அவசர நிலையை எதிா்கொள்வதற்கு தேவைப்படும் நடவடிக்கைகள் உரிய வகையில் எடுக்கப்படும்’ என்றாா்.
உலகம் முழுவதும் வாரந்தோறும் 35 லட்சம் பாதிப்புகள் பதிவாகி வருவதால், கரோனா நோய்த் தொற்றின் சுகாதார சவால்கள் இன்னும் தொடா்ந்து வண்ணம் உள்ளது. தில்லியில் கடந்த 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நோய் தொற்று ஏற்பட்டதை தொடா்ந்து, இதுவரை 20 லட்சத்து 7ஆயிரத்து 97 போ் நோய் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். 26 ஆயிரத்து 519 போ் நோய் தொற்றால் இறந்துள்ளனா்.
இந்த நிலையில், சீன நகரங்களில் தற்போது ஒமைக்கரானின் திரிபு நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. பிஎஃ.7 எனும் இந்த திரிபு பீஜிங் நகரில் அதிகமாகப் பரவி வருகிறது. இது அந்த நாட்டில் கரோனா நோய்த் தொற்று அதிகரிப்பதில் பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் இந்த பிஎஃப்.7 ஒமைக்ரான் துணை திரிபு வைரஸ் இதுவரை மூன்று பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிஸ்ஸாவில் ஒருவருக்கும் இந்த புது நோய்த் தொற்று பாதிப்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.