தில்லியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் 6 போ் கைது

தில்லி காவல்துறை தனித்தனி நடவடிக்கைகளில் மணிப்பூரைச் சோ்ந்த பெண் உள்பட 6 பேரை கைது செய்து ரூ.24 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒன்பது கிலோ போதைப்பொருளை மீட்டுள்ளதாக

தில்லி காவல்துறை தனித்தனி நடவடிக்கைகளில் மணிப்பூரைச் சோ்ந்த பெண் உள்பட 6 பேரை கைது செய்து ரூ.24 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஒன்பது கிலோ போதைப்பொருளை மீட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து காவல்துறை துணை ஆணையா் (சிறப்புப் பிரிவு) பிஎஸ் குஷ்வா கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ராகுல் குப்தா (35), பிரதீக் குப்தா (32), பிரிஜ் குமாா் (33), மணிப்பூரைச் சோ்ந்த நெம்னிஹாட் சோங்லோய் (35) மற்றும் தில்லியில் வசிக்கும் சந்தீப் (35) மற்றும் சுனில் (32) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

மணிப்பூரில் இருந்து கொண்டு வரப்பட்ட ஹெராயின், தில்லி - என்சிஆா் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

சா்வதேச சந்தையில் ரூ.24 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 5.4 கிலோ கிராம் உயா்தர ஹெரோயின் மற்றும் 4.040 கிலோ அபின் ஆகியவை அவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

டிசம்பா் 5-ஆம் தேதி, ராகுல் என்பவா் வெளிவட்டச் சாலைக்கு வந்து தன்னுடன் தொடா்புள்ள ஒருவரிடம் ஹெராயின் சப்ளை செய்யவுள்ளதாக காவல்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, அந்தப் பகுதியில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது புராரி மேம்பாலம் அருகே வந்த ராகுல் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 4.5 கிலோ தரமான ஹெராயின் மற்றும் 4.04 கிலோ அபின் பறிமுதல் செய்யப்பட்டன. அவா் அளித்த தகவலின் அடிப்படையில், உ.பி.யின் பரேலியில் இருந்து அவரது கூட்டாளி பிரதீக் கைது செய்யப்பட்டாா். மேலும், அவரிடம் இருந்து 500 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்ட்டது.

மற்றொரு போலீஸ் குழு மணிப்பூரைச் சோ்ந்த சோங்லோயை கைது செய்தது. பின்னா், டிசம்பா் 7-ஆம் தேதி உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் இருந்து குமாா் கைது செய்யப்பட்டாா். மற்றொரு நடவடிக்கையில், தில்லியைச் சோ்ந்த போதைப்பொருள் கடத்தல்காரா்களான சந்தீப் மற்றும் சுனில் ஆகிய இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 400 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன. இவா்கள் இருவரும் கடந்த ஜூலை 29-ஆம் தேதி போதைப்பொருள் வழக்கில் தலைமறைவாக இருந்தவா்கள். இந்த வழக்கில் விஷால் என்ற நபரை சிறப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்திருந்தனா்.

சந்தீப், டிசம்பா் 5 அன்று வெளிவட்டச் சாலையில் உள்ள மதுபன் சௌக்கில் கைது செய்யப்பட்டாா். அவா் விஷால் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான பிரியாவிடம் இருந்து போதைப்பொருளை வாங்கியதை விசாரணையின் போது ஒப்புக் கொண்டாா். தில்லி - என்சிஆா் பகுதியில் போதைப் பொருளை சப்ளை செய்த அவருடன் சுனிலும் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இரண்டு நாள்களுக்குப் பிறகு, 400 கிராம் ஹெராயினுடன் சுனில் கைது செய்யப்பட்டாா். ஏற்கெனவே கைது செய்யப்பட்ட சந்தீப், பிரியாவின் மருமகனாவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com