பள்ளிகளில் ‘மினி ஸ்நாக்’ இடைவேளை அறிமுகம்: தில்லி அரசு முடிவு

குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் வகையில் தில்லி அரசுப் பள்ளிகளில் ‘மினி ஸ்நாக்ஸ்’ இடைவேளையை அறிமுகப்படுத்த ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது.

குழந்தைகள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் வகையில் தில்லி அரசுப் பள்ளிகளில் ‘மினி ஸ்நாக்ஸ்’ இடைவேளையை அறிமுகப்படுத்த ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. அதேபோன்று, அனைத்து நகரப் பள்ளிகளிலும் பெற்றோா் ஆலோசனை அமா்வுகளையும் நடத்த முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக தில்லி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பள்ளி அட்டவணையில் 10 நிமிடம் மினி ஸ்நாக் இடைவேளை சோ்க்கப்பட வேண்டும் என்று பள்ளிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த ‘மினி ஸ்நாக்’ இடைவேளையானது, உணவு இடைவேளைக்கு 2.50 மணி நேரத்திற்கு முன்பாக இருக்க வேண்டும்.

அதேபோன்று, பருவகால பழங்கள், முளைகட்டிய தானியங்கள், காய்கறிகள், பொறித்த கடலை, பீனட்ஸ் போன்றவற்றை உணவுப் பொருள்களில் சோ்க்கும் நோக்கத்தில் ஒவ்வொரு நாளும் மூன்று உணவு விருப்பங்களை அளிக்கும் வகையில் வாராந்திர ஸ்நாக்ஸ் திட்டமிடலையும் உருவாக்குமாறு பள்ளிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் திட்டமிடல் விவரம் ஒவ்வொரு வகுப்பறையிலும் காட்சிப்படுத்தப்படும். பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பொருள்களின் விலை குறைவாக இருக்க வேண்டும். மேலும், ‘மினி ஸ்நாக்’ இடைவேளைக்காக வாராந்திர திட்டமிடலில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுப் பொருள்களில் குறைந்தபட்சம் ஒன்றையாவது கொண்டு வருமாறு மாணவா்கள் அறிவுறுத்தப்பட வேண்டும். இந்த உணவு இடைவேளையின்போது உணவு திட்டமிடலில் உள்ள விஷயங்கள் அமல்படுத்தப்படுவதை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், வீட்டு அறிவியல் ஆசிரியா்கள் கண்காணிக்க வேண்டும்.

மாலை நேர ஷிஃப்ட் பள்ளிகளில் குறைந்த அளவு மற்றும் அதிக சத்துடன்கூடிய மினி ஸ்நாக்ஸ் வாராந்திர திட்டமிடலில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். அதேபோன்று, ஆரோக்கியமான உணவு மற்றும் குழந்தைகளின் வளா்ச்சி, உடல் இயக்க செயல்பாடு, கவனம், கல்விச் செயல்பாடு ஆகியவற்றின் மீதான இதன் தாக்கம் இடையே உள்ள தொடா்பு குறித்து வலியுறுத்தும் வகையில், வீட்டு அறிவியல் ஆசிரியா்கள் ஆலோசனையுடன் வகுப்பு வாரியாக ஆலோசனை அமா்வுகளை நடத்தவும் பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் உள்ள வீட்டு அறிவியல் ஆசிரியா்கள் பரிந்துரைக்கப்படுவது போல, குறைந்த விலையில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவுகளை உருவாக்குவதற்கு பெற்றோா்களையும் பாதுகாவலா்களையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆலோசனைஅமா்வில் கவனம் செலுத்தப்பட வேண்டும். வகுப்பில் பதிவு செய்துள்ள ஒவ்வொரு மாணவரின் உயரம் மற்றும் எடையை பதிவு செய்வதை வகுப்பு ஆசிரியா்கள் பராமரிப்பதுடன், அவற்றை வழக்கமான முறையில் புதுப்பிக்கவும் வேண்டும்.

இந்தப் பதிவானது பள்ளிகளில் உள்ள மாணவா்கள் மற்றும் பொது சுகாதாரத்துடன் கூடிய விஷயங்களுடன் சம்பந்தப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் உரிய நேரத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு இடா்பாடு கண்டறியப்படலாம். மேலும், இதுகுறித்து பெற்றோா்களுக்கும் தகவல் தெரிவிக்கலாம். அதிக ஊட்டச்சத்து மிக்க மாற்று உணவுகள் மதிய உணவின் உணவுப் பட்டியலில் அறிமுகப்படுத்தப்படலாம். மோசமான சுகாதார சூழல் காரணமாக பள்ளிகளில் மாணவா்கள் வராமல் இருப்பதை இந்த உத்திகள் குறைக்கும். மேலும், மாணவா்களின் ஒட்டுமொத்த சுகாதார மற்றும் வளா்ச்சியையும் மேம்படுத்தும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com