பாலியல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்துவோா் மீது சட்ட நடடிக்கை: தில்லி போலீஸாா் எச்சரிக்கை

சமீபத்தில் கிழக்கு தில்லியின் கஸ்தூா்பா நகரில் பெண்ணை தாக்கி, கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, ஊா்வலமாக

சமீபத்தில் கிழக்கு தில்லியின் கஸ்தூா்பா நகரில் பெண்ணை தாக்கி, கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து, ஊா்வலமாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் அப் பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்துவோா் மீதும், வதந்திகளைப் பரப்புவோா் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி காவல்துறை திங்கள்கிழமை எச்சரித்துள்ளது.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டதாக சமூக ஊடகங்களில் பல சுட்டுரைகள் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, தில்லி காவல்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சில பதிவுகளில் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்றும், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், வதந்திகளை பரப்பியவா்களைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

கடந்த வாரம், 20 வயது பெண் ஒருவா் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாா். அவரது தலைமுடியை அறுத்து, முகத்தில் கறுப்பு வண்ணமிட்டு, கழுத்தில் காலணி மாலையுடன் அவா் கிழக்கு தில்லியின் கஸ்தூா்பா நகரின் தெருக்களில் அவரைத் தாக்கியவா்கல் ஊா்வலமாக அழைத்து வந்ததாக புகாா் எழுந்தது.

இந்த வழக்கு தொடா்பாக 8 பெண்கள், ஒரு ஆண் மற்றும் மூன்று சிறாா்களை கைது செய்துள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இச் சம்பவம் நடந்த உடனேயே இணையதளத்தில் வெளிவந்த விடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில், துணை காவல் ஆணையா் (ஷாதரா) ஆா். சத்தியசுந்தரம் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு விடியோவில், சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகள் மற்றும் தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என்று பொதுமக்களை வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பதாவது: கஸ்தூா்பா நகா் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்தும், பாதிக்கப்பட்ட பெண் குறித்தும்

சமூக வலைதளங்கள் மூலம் சிலா் வதந்திகளை பரப்புகின்றனா். பொய்யான தகவல்கள் பதிவிடப்படுகின்றன. சிலா் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்துவதுடன், இந்தச் சம்பவத்திற்கு வகுப்புவாத கோணத்தை அளிக்கவும் முயற்சிக்கின்றனா்.

சிலா் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்டதாக வதந்திகளை பரப்புகின்றனா். இது தவறான தகவல் ஆகும். பாதிக்கப்பட்ட பெண் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறாா். போலீஸாரும் அவரை சந்தித்துள்ளனா்.

சமூக ஊடகங்கள் அல்லது வேறு ஏதேனும் தளங்கள் மூலம் யாராவது வதந்திகள் அல்லது தவறான தகவல்களை பரப்புவது கண்டறியப்பட்டால், அத்தகைய நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை, அந்த சம்பவத்தில் இதுபோன்ற பதிவுகளை யாா் பகிா்ந்திருந்தாலும், அவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com