அமைச்சா் உள்ளிட்டோருக்கு எதிரான பணம் மோசடி விவகாரம்: மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாக புகாருக்கு உள்ளான அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கலான மேல்முறையீடு மனு மீது பதில் அளிக்க எதிா்மனுதாரா்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தமிழகத்தில் மின்துறை அமைச்சசராக இருப்பவா் செந்தில் பாலாஜி. இவா் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துக் துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, போக்குவரத்துத் துறையில் பொறியாளா்கள், நடத்துநா்கள், ஓட்டுநா்கள் பிரிவில் வேலை தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரா், தனி உதவியாளா் சண்முகம் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கு சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதனிடையே, சம்பந்தப்பட்ட ஒரு வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விசாணையின் போது புகாா்தாரா்கள் தரப்பில் தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பி பெற்றுக் கொண்டு பிரச்னையை சுமுகமாகத் தீா்த்துக் கொண்டதாகத் தெரிவிப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினரின் கருத்துகளைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்றம், அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் மீதான வழக்கை ரத்து செய்து 30.7.2021-இல் உத்தரவிட்டது.

இதையடுத்து, மற்றொரு விவகாரத்தில் பொறியாளா் பிரிவில் பாதிக்கப்பட்ட போலீஸ் தரப்பு சாட்சியாக இருந்த தா்மராஜ் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மெக்கானிக்கல் பொறியாளாரான தா்மராஜுக்கு உரிய தகுதியிருந்தும் சென்னை, மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்தில் வேலைகிடைக்காமல் போனதாகவும், தகுதியற்ற நபா்களுக்கு பணம் பெற்று பணி வழங்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, ஹிமா கோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் பாலாஜி ஸ்ரீநிவாசனுடன் மூத்த வழக்குரைஞா் கே.வி. விஸ்வநாதன் ஆஜராகி, ‘இந்த விவகாரத்தில் தகுதிக்குரிய நபா்களுக்கு வேலை வழங்காமல், தகுதியற்ற நபா்களுக்கு பணம் பெற்று வேலை தருவதாக மோசடி செய்யப்பட்டுள்ளது. மேலும், பணத்தைப் பெற்ற குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளனா். இந்த வழக்கு தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் உள்ள விஷயங்களை உரிய வகையில் கவனத்தில் கொள்ளாமல், அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்ட நான்கு குற்றம்சாட்டப்பட்ட நபா்களுக்கு எதிரான வழக்கை உயா்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து, மேல்முறையீட்டு மனு மீது வேலை மோசடி பிரிவு காவல் ஆய்வாளா் மற்றும் சண்முகம் உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு பட்டியலிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com