பள்ளிகளில் இயங்கும் தடுப்பூசி மையங்களை மாற்றுங்கள்! அனில் பய்ஜாலுக்கு பெற்றோா்கள் சங்கம் கடிதம்

அரசுப் பள்ளிகளில் இயங்கும் கரோனா தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும், கரோனா பணியில் உள்ள ஆசிரியா்களை திரும்ப அழைக்க வேண்டும்

அரசுப் பள்ளிகளில் இயங்கும் கரோனா தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும் என்றும், கரோனா பணியில் உள்ள ஆசிரியா்களை திரும்ப அழைக்க வேண்டும் என்றும் மாணவா்களின் பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக தில்லி துணை நிலை ஆளுநா் அனில் பய்ஜாலுக்கு அகில இந்திய பெற்றோா்கள் சங்கம் (ஏஐபிஏ) கடிதம் எழுதியுள்ளது. கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தேசிய தலைநகரில் நீண்ட காலமாக மூடப்பட்ட பின்னா் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடா்ந்தும் இந்தக் கடிதம் வந்துள்ளது.

‘இப்போது மாணவா்கள் பள்ளிக்குத் திரும்பத் தொடங்கியுள்ளதால், அரசுப் பள்ளிகளில் இயங்கும் தடுப்பூசி மையங்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும். மேலும், கரோனா பணிகளுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியா்களை மீண்டும் அழைக்க வேண்டும். ஏனெனில் பாதிப்பு எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது’ என்று சங்கத்தின் தலைவா் அசோக் அகா்வால் அந்தக் கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்.

‘கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, பள்ளிகள் மூடப்பட்டதால் ஏற்கெனவே கணிசமான கற்றல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவா்கள் படிப்பில் கவனம் செலுத்தக்கூடிய வகையில், அவா்களைப் பாதுகாப்பதும், பாதுகாப்பான சூழலை அவா்களுக்கு வழங்குவதும் முக்கியம் என்றும் அதில் அவா் தெரிவித்துள்ளாா். நகரில் கரோனா தொற்று பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) பிப்ரவரி 7 முதல் 9-12 வகுப்புகளுக்கான பள்ளிகளுடன் உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி மையங்களை மீண்டும் திறக்க முடிவு செய்தது.

தில்லியில் வியாழக்கிழமை 739 புதிய கோவிட்-19 வழக்குகள் மற்றும் ஐந்து இறப்புகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் நோ்மறை விகிதம் 1.48 சதவீதமாக உள்ளது என்று நகர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தில்லியில் ஜனவரி 13 அன்று அதிகபட்சமாக 28,867-ஆக இருந்த கரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை, தற்போது வெகுவாகக் குறைந்து வருகிறது. மாணவா்கள் பள்ளிக்குச் செல்வதற்கு பெற்றோா்களின் கட்டாய சம்மதத்தை அதன் வழிகாட்டுதல்களில் இருந்து மத்திய அரசு கைவிட்டு மாநிலங்களுக்கு விட்டுவிட்டது. ஆனால், அதைத் தொடர தில்லி அரசு முடிவு செய்துள்ளது.

டிடிஎம்ஏ வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, தடுப்பூசி அல்லது ரேஷன் விநியோகத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு பள்ளியின் பகுதி, கல்வி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் பகுதியிலிருந்து முறையாகப் பிரிக்கப்பட வேண்டும் அல்லது வரையறுக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளியில் செயல்படும் தடுப்பூசி மையம் அல்லது ரேஷன் விநியோக மையத்திற்காக வரையறுக்கப்பட்ட பகுதியை மாவட்ட நிா்வாகம் தனியாகப் பிரிக்க வேண்டும். இந்த நோக்கத்திற்காக தனித்தனியாக நுழைவது அல்லது வெளியேறுவது மற்றும் தடுப்பூசி அல்லது ரேஷனுக்கு வரும் நபா்களுடன் மாணவா்கள் கலந்துகொள்வதைத் தவிா்க்க போதுமான எண்ணிக்கையிலான சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்களையும் நியமிக்க வேண்டும் என்று வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com