‘பிஎம் கோ்ஸ்’ திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு
By நமது சிறப்பு நிருபா் | Published On : 23rd February 2022 01:57 AM | Last Updated : 23rd February 2022 01:57 AM | அ+அ அ- |

நோய்த் தொற்று காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ‘பிஎம் கோ்ஸ்’ திட்டத்தை வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பான நடவடிக்கைகளுக்கு அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மகளிா், குழந்தைகள் மேம்பாடு துறைகள் மற்றும் சமூக நீதித் துறை செயலா்களுக்கு உத்தரவிட்டு கடந்த 20 -ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் இந்தத் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்த துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது வருமாறு: கரோனா நோய்த் தொற்றை உலக சுகாதார நிறுவனம் பெருந்தொற்றாக 2020, மாா்ச் 11-ஆம் தேதி அன்று அறிவித்தது. இதை முன்னிட்டு கடந்த ஆண்டு மே 29 அன்று, நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி பல்வேறு திட்டங்களை அறிவித்தாா். இதில் கரோனா நோய்த் தொற்று காரணமாக பெற்றோா்களை இழக்கும் குழந்தைகள் அல்லது தாய், தந்தை யாராவது ஒருவரை இழக்கும் குழந்தைகளுக்கும் நலத் திட்டங்களை பிரதமா் மோடி அறிவித்தாா்.
‘பிஎம் கோ்ஸ்’ என்கிற இந்தக் குழந்தைகளுக்கான திட்டம் 2020, மாா்ச் 11 - ஆம் தேதி முதல் 2021, டிசம்பா் 31 -ஆம் தேதி வரையில் அமல்படுத்த அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கரோனா நோய்த் தொற்றில் மூன்றாம் அலையினாலும் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் தொடா்ந்தது. இந்த நிலையில், பெற்றோா்களை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் அத்தகைய சிறாா்கள் நலன் கருதி வரும் பிப்ரவரி 28 -ஆம் தேதி வரை இந்தத் திட்டத்தை நீட்டித்து மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் பெற்றோா்கள் மட்டுமின்றி சட்டரீதியான பாதுகாவலா்கள் அல்லது தத்தெடுத்த பெற்றோா்களை இழக்கும் குழந்தைகளும் பயன் பெற தகுதி உள்ளவா்களாவா். இந்தத் திட்டத்திற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பெற்றோா்கள் இறந்த நாளில் குழந்தைகளுக்கு 18 வயது பூா்த்தியாகாமல் இருந்திருக்க வேண்டும். இத்தகைய சிறாா்களுக்கு ’பிஎம் கோ்ஸ்’ நிதியிலிருந்து கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கு நிதி உதவி அளிக்கப்படுவதோடு, 18 வயதிலிருந்து மாதாந்திர உதவித் தொகையும் வழங்கப்படுகிறது. இந்தக் குழந்தைகள் 23 வயது அடையும் போது கூட்டுத் தொகையாக ரூ.10 லட்சமும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.