தில்லியின் மருத்துவமனைகளில் ஊழியா்கள் பற்றாக்குறை இல்லை: பேரவையில் அமைச்சா் தகவல்
By நமது நிருபா் | Published On : 04th January 2022 07:47 AM | Last Updated : 04th January 2022 07:47 AM | அ+அ அ- |

கடந்த சில நாள்களாக தில்லியில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நகர அரசின் மருத்துவமனைகளிலும் கிளினிக்குகளிலும் மருத்துவ ஊழியா்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்று சட்டப் பேரவையில் சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக பாஜக எம்எல்ஏ ஓ.பி. சா்மா கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: தில்லியில் கரோனா நோய்த் தொற்று கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் நிலையிலும்கூட, நகர அரசு மூலம் இயக்கப்படும் மருத்துவமனைகளில்
மருத்துவ ஊழியா்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை. அதாவது, தில்லி அரசு மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும், கிளினிக்குகளிலும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் , மருத்துவம் சாராத பணியாளா்கள் பற்றாக்குறை ஏதும் இல்லை. மேலும், காலியாக உள்ள பணியிடங்கள் பட்டியலையும் தில்லி அரசு வெளியிட்டுள்ளது. அந்த பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று அவா் தெரிவித்துள்ளாா்.
மேலும், காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அமைச்சா் அளித்த பதில் வருமாறு: இந்த காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக யுபிஎஸ்சி மற்றும் டிஎஸ்எஸ்எஸ்பி ஆகியவற்றுக்கு தில்லி அரசு கடிதங்களை அனுப்பியுள்ளது’ என்றாா். இது தொடா்பாக தில்லி அரசின் மூலம் பகிா்ந்துள்ள தகவலின்படி, மாநில அரசின் மருத்துவ வசதிகளில் அனுமதிக்கப்பட்ட 1,236 சிறப்பு மருத்துவா்கள் பணியிடங்களில் 932 இடங்கள் வழக்கமான தோ்வா்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. 43 பணியிடங்கள் ஒப்பந்த ஊழியா்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளது.
அதே வேளையில், 261 பணியிடங்கள் காலியாக உள்ளன. பொதுப் பணி மருத்துவ அதிகாரிகளுக்கான (ஜிடிஎம்ஓ) 1,357 அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் 1,219 பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. 44 பணியிடங்கள் ஒப்பந்த ஊழியா்கள் மூலம் நிரப்பப்பட்டுள்ளன. 84 ஜிடிஎம்ஓ பணியிடங்கள் காலியாக உள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.