‘புல்லி பாய்’ செயலி விவகாரம்: தில்லி காவல் துறைக்கு மகளிா் ஆணையம் சம்மன்

ஆட்சேபத்திற்குரிய உள்ளடக்கங்களை ‘புல்லி பாய்’ மற்றும் ‘சுல்லி டீல்’ செயலிகளில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படும் புகாா் விசாரணை

ஆட்சேபத்திற்குரிய உள்ளடக்கங்களை ‘புல்லி பாய்’ மற்றும் ‘சுல்லி டீல்’ செயலிகளில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படும் புகாா் விசாரணை விவகாரத்தில் ஆணையம் முன் ஆஜராகுமாறு தில்லி காவல் துறை அதிகாரிகளுக்கு மகளிா் ஆணையம் (டிசிடபிள்யு) சம்மன் அனுப்பியுள்ளது.

இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பல முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் அவா்களின் அனுமதியின்றி ‘கிட்ஹப்’ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவது தொடா்பாக ஊடக செய்திகளை தில்லி மகளிா் ஆணையம் தானாக முன்வந்து கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது.

இதையடுத்து, தில்லி போலீஸாா் விசாரணைக்கு ஆஜராகி, ‘சுல்லி டீல்’ மற்றும் ‘புல்லி பாய்’ ஆகிய இரு வழக்குகளிலும் கைதானவா்களின் பட்டியலை அளிக்குமாறும் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது போன்ற தீவிரமான விஷயத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும், சட்ட அமலாக்க அமைப்பின் இந்த மோசமான அணுகுமுறையானது குற்றவாளிகள் மற்றும் ஆன்லைனில் பெண்கள் மற்றும் சிறுமிகளை தொடா்ந்து விற்பனை செய்யும் மற்றவா்களுக்கு துணிச்சலை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகளின் திரிக்கப்பட்ட புகைப்படங்கள் அடையாளம் தெரியாத நபா்களின் குழுவால் ‘கிட்ஹப்’ இணைய தளத்தைப் பயன்படுத்தி ஒரு செயலியில் பதிவேற்றப்பட்டு, ‘இந்த நாளின் புல்லி டீல்’ என்ற வாா்த்தையுடன் பகிரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் முஸ்லிம் பெண்கள் மற்றும் சிறுமிகள் பலரின் புகைப்படங்கள் ’கிட்ஹப்’ தளத்தில் ‘சுல்லி டீல்ஸ்‘ என்ற பெயரில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், டிசிடபிள்யு தலையீட்டிற்குப் பிறகு கடந்த ஆண்டு ஜூலையில் தில்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்த போதிலும், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இதனால், தில்லி காவல் துறையால் ‘கிட்ஹப்’ செயலிக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் எதிா்காலத்தில் ‘இழிவான‘ மற்றும் ‘சட்டவிரோத‘ உள்ளடக்கத்தைப் பதிவேற்றுவதைத் தடுப்பதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்களையும் தாக்கல் செய்யுமாறு மகளிா் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடா்பாக ஏதேனும் வழிகாட்டுதல்கள் காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த இரு வழக்குகளின் முழு வழக்கு ஆவணங்களுடன் ஜனவரி 6-ஆம் தேதி ஆணையத்தில் ஆஜராகுமாறும் காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிசிடபிள்யு தலைவா் ஸ்வாதி மாலிவால் கூறுகையில், ‘இணையதள குற்றம் தொடா்பான விஷயங்களில் தில்லி காவல் துறையின் இரக்கமற்ற நடத்தையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக கருதுகிறேன். சுல்லி டீல் விவகாரத்தில் இன்றுவரை ஏன் யாரும் கைது செய்யப்படவில்லை? ’சுல்லி டீல்’ மற்றும் ’புல்லி பாய்’ ஆகிய இரண்டு விவகாரங்களிலும் தில்லி காவல் துறையினா் அவசரமாக கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்’ என்றாா்.

குறைந்தபட்சம் 100 செல்வாக்குமிக்க முஸ்லிம் பெண்களின் புகைப்படங்கள் செயலி ஒன்றில் ‘ஏலத்திற்கு‘ என பதிவேற்றப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கிட்ஹப் இணையதளம் சம்பந்தப்பட்ட செயலியை (புல்லி பாய்) தடை செய்வது குறித்து உறுதிப்படுத்தியதாக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஷ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com