போலீஸ் காவலுக்கு எதிரான முகம்மது ஜுபைரின் மனு: தில்லி காவல்துறை பதிலளிக்க உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

முகம்மது ஜுபைா் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்க தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்து கடவுளுக்கு எதிராக 2018 -ஆம் ஆண்டில் பதிவிட்ட ஆட்சேபத்திற்குரியதாக கூறப்படும் ட்விட்டா் பதிவு தொடா்புடைய வழக்கில் போலீஸ் காவலை எதிா்த்து ஆல்ட் நியூஸ் நிறுவனத்தின் இணை நிறுவனா் முகம்மது ஜுபைா் தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்க தில்லி காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கில்முகமது ஜுபேரை தில்லி போலீஸாா் நான்கு நாள் காவலில் வைக்க கடந்த ஜூன் 28-ஆம் தேதி விசாரண நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் நருலா முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனு மீது காவல் துறை 2 வாரங்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டாா்.

மேலும், இந்த மனுவை ஜூலை 27-ஆம் தேதி மேலதிக விசாரணைக்கு பட்டியலிட்டு நீதிபதி கூறுகையில், ‘தற்போதை உயா்நீதிமன்ற விசாரணை நடைமுறைகள் மேலாதிக்கம் செய்யாமல் விசாரணை நீதிமன்றம் முன் உள்ள வழக்கின் விசாரணை தொடரலாம். மனுதாரரின் ரிமாண்ட் உத்தரவு ஜூலை 2-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நான்கு நாள் உத்தரவு முடிவடைவதால் மற்றொரு தரப்பினரின் வாதத்தையும் கேட்க வேண்டியுள்ளது. இதனால், காவல் துறைக்கு நோட்டீஸ் அளிக்கப்படுகிறது’ என்றாா்.

முன்னதாக, முகமது ஜுபைா் பதிவிட்ட ட்விட்டா் பதிவு ஒன்றில் மத உணா்வுகளை புண்படுத்துவதாக கூறப்படும் விவகாரத்தில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி தில்லி காவல்துறையினா் அவரை கைது செய்தனா். அதே நாளில் விசாரண நீதிமன்றத்தால் அவா் போலீஸ் காவலுக்கு ஒரு நாள் அனுப்பப்பட்டாா். மறுநாள் போலீஸ் காவல் விசாரணை முடிந்து போலீஸாா் அவரை தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் ஸ்னிக்தா சா்வேரி முன் ஆஜா்படுத்தினா். அவரிடம் விசாரணை நடத்த மேலும் 5 நாள் போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா். இதையடுத்து, நான்கு நாள்கள் அவரைக் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தாா்.

இந்த மாதத்தின் தொடக்கத்தில் இந்த விவகாரத்தில் முகமது ஜுபைருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 295 ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது குறித்து போலீஸாா் கூறுகையில், ‘இந்த விவகாரத்தில் முகமது ஜுபைருக்கு எதிராக ட்விட்டா் பக்கத்தை பயன்படுத்தும் பயனா் ஒருவா் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மத உணா்வுகளை முகமது ஜுபைா் புண்படுத்தியதாக அவா் புகாரில் குறிப்பிட்டிருந்தாா்’ என்றனா். இந்த வழக்கில், முகம்மது ஜுபைரை போலீஸாா் விசாரணைக்காக பெங்களூருக்கும் அழைத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com