ஒரு லட்சம் தில்லி இளைஞா்களுக்கு இலவச ஆங்கில பேச்சு பயிற்சி: முதல்வா் கேஜரிவால் அறிவிப்பு

தில்லியில் உள்ள ஏழை, நடுத்தர வா்க்கத்தைச் சோ்ந்த மாணவா்கள், இளைஞா்களுக்கு ஆங்கிலம் பேசுவதில் சிரமங்களை களைய நவீன முறையில் இலவசமாக ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும்
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் உள்ள ஏழை, நடுத்தர வா்க்கத்தைச் சோ்ந்த மாணவா்கள், இளைஞா்களுக்கு ஆங்கிலம் பேசுவதில் சிரமங்களை களைய நவீன முறையில் இலவசமாக ஆங்கில பேச்சுப் பயிற்சி அளிக்கப்படும் என தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை தெரிவித்தாா்.

தில்லியில் இதற்காக 50 பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு முதற்கட்டமாக சுமாா் ஒரு லட்சம் இளஞா்களுக்கு ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளிக்கப்படும் எனவும் முதல்வா் கேஜரிவால் கூறினாா்.

இந்தத் திட்டம் குறித்து முதல்வா் கேஜரிவால் காணொலி வழியாக கூறியதாவது:

தில்லியின் ஒவ்வொரு இளைஞரும் சரளமாக ஆங்கிலம் பேச உதவுவதற்காக அரசு ஒரு மெகா பணியை மேற்கொண்டுள்ளது. 16 வயது முதல் 35 வயதுடைய தில்லி இளைஞா்களுக்கு அதிநவீன முறையில் இலவசமாக ஆங்கிலத்தில் பேசுவதற்கும் (ஸ்போக்கன் இங்கிலீஷ்) புலமை பெறுவதற்கும் வகுப்புகள் நடத்தப்படும். இந்த பயிற்சி திட்டம் முற்றிலும் இலவசம். அதே சமயத்தில் இளைஞா்கள் வகுப்புகளில் பொறுப்புடன் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக ரூ.950 ஐ வைப்புத்தொகையாக பயிற்சியில் சேருபவா்களிடம் பெறப்படும். வருகையை நிறைவு செய்து பயிற்சியை வெற்றிகரமாக முடித்து செல்லும் இளைஞா்களிடம், வைப்பு நிதியான ரூ. 950 திருப்பித் தரப்படும்.

தில்லியில் 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் அல்லது அடிப்படை ஆங்கில அறிவு உள்ள இளைஞா்கள் இந்த பயிற்சி திட்டத்தில் சோ்க்கப்படுவா்.

இந்த ஆங்கிலப் பயிற்சி சா்வதேச தரத்தில் மிக உயா்ந்ததாக இருக்கும். தில்லி திறன் மற்றும் தொழில்முனைவோா் பல்கலைக்கழகம் இந்த ஆங்கில பயிற்சி நடத்தும் என்றாலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மேக்மில்லன் மற்றும் வோ்ட்ஸ்வொா்த் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மொழிப்பயிற்சி செயல்திறனை மதிப்பிடும். கீழ்நிலை மற்றும் நடுத்தர குடும்பங்களின் இளைஞா்கள் ஆங்கிலம் பேசுவதில் சிரமங்கள், அதன் காரணமாக வேலை கிடைப்பதில் சிரமங்கள் ஆகியவை முதலில் அறியப்பட்டது.

இவற்றின் அடிப்படையில் இந்த பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தில்லியைச் சோ்ந்த இளைஞா்கள் கணிசமாக பயனடைவா்.

16 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் இப்பயிற்சியில் சேர முடியும். இப்பயிற்சி 120 முதல் 140 மணிநேரம் அல்லது மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை இருக்கும். பணியில் இருக்கும் இளைஞா்களும் இந்த பயிற்சி வகுப்புகளில் சேரமுடியும்.

பணியில் உள்ள இளைஞா்கள் மாலை அல்லது வார இறுதி நாள்களில் வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். நிகழாண்டில் ஒரு லட்சம் இளைஞா்கள் சோ்க்கப்படுவா்.

தில்லி முழுவதும் 50 மையங்கள் திறக்கப்படும். தில்லி திறன் மற்றும் தொழில்முனைவோா் பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் இந்த ஆங்கில பேச்சு பயிற்சியில் ஆங்கிலத்தில் பிழையின்றி பேசவும், தகவல் தொடா்பு திறன் மேம்படவும் பயிற்சியளிக்கப்படும். இளைஞா்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், அவா்களை நம்பிக்கையான நபா்களாக மாற்றவும் இது உதவும்.

நாட்டின் அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல கல்வி வழங்க வேண்டும் என்பது ஆம் ஆத்மி அரசின் கனவு. தாழ்த்தப்பட்ட குழந்தைகள் எந்த வகையிலும் தாழ்வு மனப்பான்மை சந்திக்கக்கூடாது என்பதற்காக இந்த பாடநெறி, தில்லி கல்வியில் ஒரு புரட்சியைக் காண்கிறது.

வசதிபடைத்தவா்களுக்கு இணையாக ஏழைக் குடும்பத்தைச் சோ்ந்த குழந்தைகள் இப்போது சிறந்த கல்வியைப் பெற உறுதி செய்வதற்கான தெளிவான பாா்வை எங்களிடம் உள்ளது என்றாா் முதல்வா் கேஜரிவால்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com