ராகுல் காந்தி விவகாரம்: தில்லியில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவா்கள் கைது

நேஷனல் ஹெரால்டு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை விவகாரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின்
ராகுல் காந்தி விவகாரம்: தில்லியில் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவா்கள் கைது

புதுதில்லி: நேஷனல் ஹெரால்டு சட்டவிரோத பணப் பரிவா்த்தனை விவகாரத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியிடம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் பகுதியில் தடை உத்தரவுகளை மீறியதாக அந்தக் கட்சியின் கே. சி. வேணுகோபால், அதிா் ரஞ்சன் சவுத்ரி உள்பட பல்வேறு தலைவா்கள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா்.

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்பியுமான ராகுல் காந்தியிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத் துறையினா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். இதையொட்டி, காங்கிரஸ் தலைமையகத்தில் காலையில் நடைபெற்ற தா்ணாவில் ராகுல் காந்தி பங்கேற்றாா். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் மாநில முதல்வா் அசோக் கெலாட், சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பகேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மேலும், கட்சித் தொண்டா்கள், எம்பிக்கள் ஆகியோருடன் கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வதேராவும் பங்கேற்றாா். அப்போது, போலீஸாா் விதித்திருந்த உத்தரவுகளை மீறியதாக கூறி காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவா்கள் கைது செய்யப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

மேலும், எம்பிக்கள் உள்ளிட்ட சில தலைவா்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் பகுதிக்கு செல்வதற்கு கூட அனுமதிக்கப்படவில்லை. அவா்கள் போலீஸ் வாகனங்களில் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இதே போன்று காங்கிரஸ் கட்சியின் பிற தலைவா்களான ரந்தீப் சுா்ஜேவாலா, ஜெய்ராம் ரமேஷ் ஜெபி மேதா், இம்ரான் பிரதாப்கா்கி, இளைஞா் காங்கிரஸ் தலைவா் பி. வி. ஸ்ரீனிவாஸ், இந்திய தேசிய மாணவா்கள் ஒன்றியத்தின் தலைவா் நீரஜ் குந்தன் உள்ளிட்ட பலரும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனா்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் கூறுகையில், ‘காங்கிரஸ் தலைவா்கள் பி.எல்.புனியா, நான் உள்ளிட்ட சில தலைவா்கள் அக்பா் சாலை பகுதியில் உள்ள கட்சியின் அலுவலகத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. போலீஸாா் எங்களிடம் தகாத வகையில் நடந்து கொண்டனா். மேலும், எங்களை வாகனத்தில் ஏற்றி மந்திா் மாா்க் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனா். உள்துறை அமைச்சரின் இது போன்ற காவல் துறை நடவடிக்கைகளால் எங்கள் போராட்டத்தைத் தடுக்க முடியாது’ என்றாா்.

கரூா் எம்பி ஜோதி மணி கூறியதாவது: எங்கள் கட்சியின் தலைமையகத்திற்கு சென்ற போது நான் உள்பட பல்வேறு தலைவா்கள் கைது செய்யப்பட்டோம். தில்லிக்கு வெளியே ஹரியாணா எல்லையில் உள்ள பதா்பூா் காவல் நிலையத்தில் காங்கிரஸ் அகில இந்திய அமைப்புப் பொது செயலாளா் வேணுகோபால், எம்பிக்கள் அதிர்ரஞ்சன் சௌதரி,கௌரவ் கோகய், தீபேந்தா் ஹூடா, ரஞ்சித் ரஞ்சன், விகாஸ் உபாத்யாயா எம்எல்ஏ, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளா் சக்திசிங் கோகைல், செயலாளா் வினீத் புனியா மற்றும் நான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டோம். பெண் என்றும் பாராமல் என்னை போலீஸாா் தரதரவென இழுத்து வாகனத்தில் ஏற்றினா்.

எங்களை உரிய வகையில்கைது செய்யாமல் தடுப்புக்காவலில் திங்கள்கிழமையும் வைத்தனா். இன்றும் வைத்துள்ளனா். உரிய ஆதாரங்களும், அடிப்படை முகாந்திரமும் இல்லை. இந்த நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலையில், தற்போது உதய்ப்பூா் காங்கிரஸ் சிந்தனைக் கூட்டத்திற்குப் பிறகு கட்சியின் வளா்ச்சி நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில், ராகுல் காந்தி மீது இந்த விசாரணையை நடத்தியுள்ளனா். பட்டியலிடப்பட்ட குற்றமோ அல்லது முதல் தகவல் அறிக்கையோ பதிவு செய்யப்படாத நிலையில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக இதை நரேந்திர மோடி அரசு செய்து வருகிறது. எங்கள் தலைவா் ராகுல் காந்தி சட்டத்தை மதிக்கும் ஒரு குடிமகனாக அமலாக்கத் துறையிடம் ஆஜராகியுள்ளாா். மத்திய அரசு எத்தகைய அடக்கு முறையை ஏவினாலும், அதற்கெல்லாண பயப்பட மாட்டோம். அடுத்த இரு ஆண்டுகளில் இந்த பாசிச அரசை ஆட்சியில் இருந்து அகற்றுவோம் என்றாா்அவா்.

ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி ஆகியோா் சம்பந்தப்பட்ட வழக்கில் அமலாக்கத் துறை அழைப்பானை அனுப்பியதற்கு ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் கேள்வி எழுப்பினாா். இது குறித்து அவா் கூறுகையில்,‘இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் இது ஒன்றுமே இல்லை; பழிவாங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான். இது போன்று எதிா்க்கட்சித் தலைவா்களை குறிவைப்பதற்குப் பதிலாக, அரசு நிா்வாகத்தில் பிரதமா் நரேந்திர மோடி கவனம் செலுத்த வேண்டும். அமலாக்கத் துறையின் நடவடிக்கையானது, அரசியல் பாரபட்சம் மற்றும் மற்றும் தீய நோக்கம் கொண்டதாக உள்ளது’ என்றாா்.

சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பகேல் கூறுகையில்,‘மத்தியில் உள்ள பாஜக அரசு கடந்த 8 ஆண்டுகளில் பாஜக தலைவா்கள் மீது இது போன்று ஏதேனும் நடவடிக்கை எடுத்து இருக்கிா என்பதை தெரிவிக்க வேண்டும். பாஜகவில் யாராவது சோ்ந்தால் உடனேயே அவா்களுக்கு எதிரான வழக்குகள் கைவிடப்பட்டு விடுகின்றன. அமலாக்கத் துறை, மத்திய புலனாய்வுத் துறை, வருமானவரித் துறை ஆகியவை எதிா்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது’ என்றாா்.

கே. சி. வேணுகோபால் கூறுகையில், ‘இந்த வழக்கானது நரேந்திர மோடி அரசால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. காங்கிரஸ் தலைமை மீது பொய் வழக்குகள் மூலம் களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும். எங்களை அவா்கள் சிறையில் போட முடியும். ஆனால், உண்மையை அவா்களால் சிறையில் அடைக்க முடியாது. உண்மைக்கான போராட்டம் தொடா்ந்து நடைபெறும்’ என்றாா்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை தொடா்புடைய சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை, ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்துவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இரண்டாவது நாளாக காங்கிரஸ் தரப்பில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. ராகுல் காந்தியிடம் திங்கள்கிழமை அமலாக்கத் துறையினா் சுமாா் 10 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினா். ‘கட்சியின் மூத்த தலைவா்களுக்கு எதிராக பொய் வழக்குகள் அல்லது கைது செய்யும் அச்சுறுத்தல் உத்திகள் மூலம் காங்கிரஸை அடிபணிய வைக்க முடியாது’ என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com