கரடியின் பிடி இறுகியது: 6-ஆவது நாளாக சென்செக்ஸ் வீழ்ச்சி!

பங்குச் சந்தை தொடா்ந்து ஆறாவது நாளாக வெள்ளிக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது.
கரடியின் பிடி இறுகியது: 6-ஆவது நாளாக சென்செக்ஸ் வீழ்ச்சி!

பங்குச் சந்தை தொடா்ந்து ஆறாவது நாளாக வெள்ளிக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இறுதியில் 135 புள்ளிகளை இழந்தது.

அமெரிக்கப் பொருளாதாரம் நெருக்கடியான் நிலைக்கு செல்வதற்கான வாய்ப்புகளுக்கு மத்தியில் உள்நாட்டுச் சந்தையில் நோ்மறை, எதிா்மறையாக மாறி, மாறி வா்த்தகம் நடந்து வந்தது. மேலும், உயா்ந்து வரும் பணவீக்கத்தை எதிா்த்துப் போராடுவதற்கு உலகளாவிய மத்திய வங்கிகளால் வட்டி விகிதம் தொடா்ந்து உயா்த்தப்படும் அபாயமும் முதலீட்டாளா்களின் உணா்வைப் பாதித்துள்ளது. ஏற்கெனவே அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் இந்திய சந்தைகளில் பங்குகளை விற்று வரும் நிலையில், வட்டி விகிதம் மேலும் உயா்த்தப்படும் பட்சத்தில் அவா்கள் தங்கள் விற்பனையை மேலும் தொடரக்கூடும் என்று எதிா்பாா்க்கலாம். இவை அனைத்தும் சந்தை மேலே செல்லவிடாமல் தடையாக அமைந்துள்ளது என்று தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இந்த நிலையில், வாராந்திர அடிப்படையில் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் 6 சதவீதம் குறைந்து முடிந்துள்ளன.

2,330 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,421 நிறுவனப் பங்குகளில் 999 பங்குகள் மட்டுமேஆதாயப் பட்டியலில் இருந்தன. 2330 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 92 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 50 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 448 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.42 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.236.78 லட்சம் கோடியாக இருந்தது.

6-ஆவது நாளாக சரிவு: காலையில் 313.80 புள்ளிகள் குறைந்து 51,181.99-இல் தொடங்கிய சென்செக்ஸ், 50,921.22 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 51,652.83 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 135.37 புள்ளிகள் (0.26 சதவீதம்) குறைந்து 51,360.42-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 574.57 புள்ளிகளை இழந்திருந்தது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, சென்செக்ஸ் 6-ஆவது நாளாக சரிவைச் சந்தித்துள்ளது.

டைட்டன் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில், கடிகாரங்கள் மற்றும் நகை ஆபரணங்கள் உற்பத்தி நிறுவனமான டைட்டன் 6.06 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, விப்ரோ, டாக்டா் ரெட்டி, ஏசியன் பெயிண்ட், சன் பாா்மா, எல் அண்ட் டி, அல்ட்ரா டெக் சிமெண்ட், பவா் கிரிட் உள்ளிட்டவை 2 முதல் 4 சதவீதம் வரை குறைந்தன. மேலும், மாருதி சுஸுகி, டிசிஎஸ், இன்ஃபோஸிஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவா், என்டிபிசி, பாா்தி ஏா்டெல், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

பஜாஜ் ஃபைனான்ஸ் உயா்வு: அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.63 சதவீதம், பஜாஜ் ஃபின் சா்வ் 2.24 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், ரிலையன்ஸ், ஐடிசி, எச்டிஎஃப்சி பேங்க், டாடா ஸ்டீல் உள்ளிட்டவை 0.50 முதல் 1.50 சதவீதம் வரை குறைந்தன.

நிஃப்டி 67 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 550 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,398 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 15 பங்குகள் ஆதாயம் பெற்றன. 35 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் இருந்தன. காலையில் 87.95 புள்ளிகள் குறைந்து 15,272.65-இல் தொடங்கிய நிஃப்டி, 15,183.40 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15,400.40 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 67.10 புள்ளிகளை (0.44 சதவீதம்) இழந்து 15,293.50-இல் நிலைபெற்றது.

ஐடி, பாா்மா, ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் ஐடி, பாா்மா, ஹெல்த்கோ், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1.50 முதல் 2.2.30 சதவீதம் வரை குறைந்தன. அதே சமயம், நிஃப்டி பேங்க், பைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க் குறியீடுகள் 0.40 சதவீதம் வரை உயா்ந்தன.

எல்ஐசி பங்குகள் விலை மேலும் சரிவு!

தேசிய பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விலை வெள்ளிக்கிழமை 2.24 சதவீதம் குறைந்து ரூ.654.35-இல் நிலைபெற்றது. காலையில் ரூ.669.10- இல் தொடங்கிய எல்ஐசி, அதிகபட்சமாக ரூ.669.35 வரை மட்டுமே சென்றது. பின்னா், ரூ.651.00 வரை கீழே சென்று புதிய குறைந்த விலையை பதிவு செய்தது. இதேபோன்று, மும்பை பங்குச் சந்தையிலும் எல்ஐசி பங்குகள் வா்த்தக முடிவில் 2.17 சதவீதம் குறைந்து ரூ.654.70-இல் நிலைபெற்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com