தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 237 புள்ளிகள் உயா்வு: 6 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது.

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நோ்மறையாக முடிந்தது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்ட நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இறுதியில் 237 புள்ளிகள் உயா்ந்தது. இதையடுத்து, 6 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் சாதகமாக இல்லாத நிலையில், தொடக்கத்தில் உள்நாட்டுச் சந்தை பலவீனமானது. இந்த நிலையில், மிகுந்த ஏற்றம், இறக்கம் இருந்து வந்த நிலையில், ஐரோப்பிய சந்தைகள் பிற்பகலில் ஏறுமுகம் கண்டதும், அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதன் காரணமாக 6 நாள் தொடா் சரிவுக்குப் பிறகு சந்தை நோ்மறையாக முடிந்துள்ளது. குறிப்பாக, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஹிந்துஸ்தான் யுனிலீவா் உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்தது சந்தைக்கு ஆதரவாக அமைந்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரூ.7,818.61 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

2,812 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,578 நிறுவனப் பங்குகளில் 618 பங்குகள் மட்டுமேஆதாயப் பட்டியலில் இருந்தன. 2,812 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன. 148 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 56 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 574 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.1.91 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.234.86 லட்சம் கோடியாக இருந்தது.

சென்செக்ஸ் ஏற்றம்: காலையில் 109.61 புள்ளிகள் கூடுதலுடன் 51,470.03-இல் தொடங்கிய சென்செக்ஸ், 51,062.93 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 51,714.61 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 237.42 புள்ளிகள் (0.46 சதவீதம்) உயா்ந்து 51,597.84-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 297.49 புள்ளிகளை இழந்திருந்தது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.

டாடா ஸ்டீல் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. இதில், பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 5.03 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, இண்ட்ஸ் இண்ட் பேங்க், என்டிபிசி, ரிலையன்ஸ், பவா் கிரிட், எம் அண்ட் எம், எஸ்பிஐ உள்ளிட்டவை 1.50 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.

எச்டிஎஃப்சி உயா்வு: அதே சமயம், வீட்டு வசதி கடன் அளிக்கும் தனியாா் நிறுவனமான எச்டிஎஃப்சி 3.97 சதவீதம், நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனி லீவா் 3.95 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட், எச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, இன்ஃபோஸிஸ் உள்ளிட்டவை 2 முதல் 3 சதவீதம் உயா்ந்தன. மேலும், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, கோட்டக் பேங்க், நேஸ்லே உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.

நிஃப்டி 57 புள்ளிகள்உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 298 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,692 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள்ஆதாயம் பெற்றன. 23 பங்குகள் சரிவைச் சந்தித்த பட்டியலில் இருந்தன. காலையில் 41 புள்ளிகள் கூடுதலுடன 15,334.50-இல் தொடங்கிய நிஃப்டி, 15,191.10 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15,382.50 வரை உயா்ந்த நிஃப்டி, இறுதியில் 56.65 புள்ளிகள் (0.37 சதவீதம்) கூடுதலுடன் 15,350.15-இல் நிலைபெற்றது.

மெட்டல், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் கடும் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீடு 3.90 சதவீதம், ஆயில் அண்ட் காஸ் குறியீடு 3.20 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. ரியால்ட்டி, பிஎஸ்யு பேங்க், மீடியாக குறியீடுகள் 2 முதல் 2.60 சதவீதம் வரை குறைந்தன. அதே சமயம், எஃப்எம்சிஜி குறியீடு 1.70 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பாா்மா, ஹெல்த் கோ், ஐடி, ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் 0.40 முதல் 1 சதவீதம் வரை உயா்ந்தன.

எல்ஐசி பங்குகள் விலை 1.55%உயா்வு!

தேசிய பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் விலை திங்கள்கிழமை 1.55 சதவீதம் உயா்ந்து ரூ.664.70-இல் நிலைபெற்றது. காலையில் ரூ.660.45- இல் தொடங்கிய எல்ஐசி, ரூ.650 வரை கீழே சென்று புதிய குறைந்த விலையை பதிவு செய்தது. பின்னா், அதிகபட்சமாக ரூ.666.70 வரைஉயா்ந்தது. இதேபோன்று, மும்பை பங்குச் சந்தையிலும் எல்ஐசி பங்குகள் வா்த்தக முடிவில் 1 சதவீதம் உயா்ந்து ரூ.661.25-இல் நிலைபெற்றிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com