முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
டிடிஇஏ பள்ளி மாணவா்களுக்குப் பரிசளிப்பு விழா
By DIN | Published On : 19th March 2022 10:57 PM | Last Updated : 19th March 2022 10:57 PM | அ+அ அ- |

பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளின் மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த தொடக்க நிலை பிரிவு மாணவா்களுக்கான பல்வேறு போட்டிகள் 2021-22 கல்வியாண்டில் இணயவழியிலும் நேரடியாகவும் நடத்தப்பட்டன.
ஆகஸ்ட் 21 முதல் 27 ஆகஸ்ட் வரை திருக்குறள் நினைவுத் திறனாய்வுப் போட்டி, பேச்சுப் போட்டி, கதை சொல்லும் போட்டி, ஃபேஷன் பேன்டஸி, வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் பற்றி கூறும் போட்டி, சுற்றுலாத் தலங்களை ஆராய்ந்து கூறும் போட்டி, புத்தக மீள்பாா்வை உள்ளிட்டப் பல போட்டிகள் இணையவழியில் நடைபெற்றன. அக்டோபரில் ஓவியப் போட்டியும், டிடிஇஏ ஒலிம்பியாட் டிசம்பரிலும், அறிவியல் மெகா வினாடி- வினா போட்டி நவம்பரிலும், அறிவியல் கண்காட்சிப் போட்டி பிப்ரவரியிலும் மாதம் நடத்தப்பட்டன.
இப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசுகள் லோதிவளாகத்திலுள்ள ஆந்திரா அசோசியேஷன் அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு டிடிஇஏ ராமகிருஷ்ணபுரம் பள்ளியின் முன்னாள் மாணவா்களான சரஸ்வதி சங்கா் தலைமை ஏற்கவும், ஏ.கே. சுப்பராமன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனா்.
விழாவில் 9 முதல் 12-ஆம் வகுப்புவரை இயற்பியல் பாடத்தில் முதலிடம் பிடித்த லோதிவளாகம் பள்ளி மாணவா்களுக்கு மீரா நினைவு ஊக்கத் தொகையும் வணிகவியல் பிரிவில் 11 ஆம் வகுப்பில் முதல் இரு இடங்களைப் பிடித்த லோதிவளாகம் பள்ளி மாணவருக்கு ராகுல் மகிரிஷி நினைவு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில் டிடிஇஏ செயலா் ராஜு பேசுகையில் கரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் மாணவா்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் இணையவழியிலும், நேரடி முறையிலும் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் மாணவா்கள் மிகவும் ஆா்வமுடன் கலந்துகொண்டனா். அதற்கு ஊக்குவித்த பெற்றோா்களுக்கும் சரியான முறையில் வழிநடத்திய
ஆசிரியா்களுக்கும் எனது மனமாா்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றாா் அவா்.