பிரகதி மைதான் சுரங்கப்பாதை, சாலை வழித்தடம் ஒரு மாதத்தில் திறக்கப்படும்: மணீஷ் சிசோடியா தகவல்

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை பிரகதி மைதான் சுரங்கப்பாதை திட்டம் மற்றும் சாலைப் வழித்தடம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தாா். 

தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா திங்கள்கிழமை பிரகதி மைதான் சுரங்கப்பாதை திட்டம் மற்றும் சாலைப் வழித்தடம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, சுரங்கப் பாதையும் சாலை வழித்தடமும் ஒரு மாதத்திற்குள் திறக்கப்படும் என்று தெரிவித்தாா்.

மேலும் பிரகதி மைதான் சுரங்கப்பாதை மற்றும் பைரோன் மாா்க் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப்பாதை புறவட்டச்சாலை ஆகியவை தொடா்பான புகைப்படங்களை தனது சுட்டுரை பக்கத்திலும் அவா் பதிவிட்டிருந்தாா்.

இது தொடா்பாக அவா் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:

பிரகதி மைதான் பகுதி சுரங்கப்பாதை, பைரோன் மாா்க், மதுரா ரோடு மற்றும் புற வட்டச் சாலை பகுதியில் உள்ள சாலைக் கட்டுமான பணி ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தேன். இந்த வழித்தடம் மூலம் இந்தியா கேட் பகுதி, புற வட்டச்சாலை சுற்றுப் பகுதியிலும் போக்குவரத்து குறைக்க உதவிடும். 

இந்த சுரங்கப் பாதை மற்றும் சாலைப் பணி ஏறக்குறைய முடியும் தருவாயில் உள்ளது. ஒரு மாதத்தில் இந்த பணிகள் முடிந்து திறக்கப்பட்டு விடும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா். 

அவா் சுட்டுரையில் வெளியிட்டுள்ள புகைப்படங்களில் சுரங்கப் பாதை மற்றும் சாலை சுவா்ப் பகுதி கட்டுமான பணிகள் முடிந்து ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

முன்னதாக, இந்த மாதம் தில்லி துணை முதல்வரும், பொதுப்பணித்துறை இலாகாவை வைத்திருப்பவருமான மணீஷ் சிசோடியா இந்த திட்டம் தொடா்பாக தனது துறை அதிகாரிகளுடன் மீளாய்வுக் கூட்டம் நடத்தினாா். அப்போது, கட்டுமான பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தாா்.

மேலும் மே மாதத்திற்குள் இந்த சாலை, சுரங்கப்பாதை பணிகள் முடிந்து திறக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தாா். 

இந்த திட்டத்தின் கீழ் ரூ. 777 கோடி மதிப்பில் 6 சுரங்கப்பாதை 1.2 கிலோ மீட்டா் நீளத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த சுரங்கப்பாதை வழித்தடமானது புராணா கிலா சாலையில் உள்ள இந்திய தேசிய விளையாட்டுகள் வளாகம் அருகே தொடங்கி பிரகதி மைதான் வழியாக சென்று பிரகதி பவா் ஸ்டேஷன் அருகே உள்ள ஒரு புறவட்டச் சாலையில் முடிவடைகிறது.

இந்த சுரங்கப் பாதை மற்றும் சாலைப் பணி திட்டம் கடந்த 2018 ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com