முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு விசாரணை

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரளத்தின் தரப்பில் சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அதற்கு பதில் அளிக்கும் வகையில் சில அறிவுத்தல்களைப் பெற வேண்டியுள்ளதாக தமிழகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு (மாா்ச் 23) நீதிபதிகள் அமா்வு பட்டியலிட்டது.

இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கா், ஏ.எஸ்.ஒகா, சி.டி.ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசின் தப்பில் வழக்குரைஞா் டி.குமணனுடன் மூத்த வழக்குரைஞா் சேகா் நாப்டே ஆஜராகி, ‘இதர தரப்பினா் தரப்பில் இந்த விவகாரத்தில் சில ஆவணங்கள், பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவை எங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலைதான் கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழக அரசிடமிருந்து சில அறிவுறுத்தல்களைப் பெற வேண்டியுள்ளது. இதனால், வழக்கு விசாரணையை புதன்கிழமைக்கு தள்ளிவைக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

மேலும், இந்த விவகாரத்தில் புதிதாக மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த மனு விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருப்பதாகவும் நீதிபதிகள் அமா்விடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை புதன்கிழமை பட்டியலிட்டு நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘இந்த வழக்கில் தற்போது எந்தவொரு நோட்டீஸும் நாங்கள் பிறப்பிக்கவில்லை. இந்த விவகாரம் ஏற்கெனவே உள்ளது. அனைத்து விசாலமான பிரச்னைகளும் முதல் விவகாரத்திலேயே இடம்பெற்றுள்ளது. முதல் விவகாரத்திலேயே இதை நாங்கள் பரிசீலிப்போம். பிரதான வழக்குடன் இந்த புதிய மனுவும் பட்டியலிடப்படும்’ என்று தெரிவித்தனா்.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் அளவைத் தேக்கும் விவகாரம் தொடா்பாகவும், அணையின் பாதுகாப்பு தொடா்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில் தமிழகம், கேரள அரசுகள், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு மேற்பாா்வை குழு, மத்திய ஜல்சக்தி அமைச்சகம் உள்ளிட்டவை பிரதிவாதிகளாகவும் சோ்க்கப்பட்டுள்ளன.

முல்லைப் பெரியாறு மேற்பாா்வைக் குழு, மத்திய நீா்வள ஆணையம் ஆகியவற்றின் தரப்பில் 27.01.2022-ஆம் தேதி ஒரு நிலவர அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ஒரு குறிப்பிட்ட பத்தியில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்யும் தேவை உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலவர அறிக்கைக்கு தமிழக அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் பதில் மனு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,

‘முல்லைப் பெரியாறு அணையானது அனைத்து வகையிலும் நல்ல நிலையிலேயே உள்ளது. அணையிலிருந்து நீா்க் கசிவு விகிதம் தினமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நீா்க்கசிவுஅனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்தான் உள்ளது. சுண்ணாம்பு வெளியேறுவதும் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு கீழ்தான் உள்ளது. அணையில் சிதைவோ அல்லது அசாதாரண சூழலோ இல்லை. மேலும், அணையின் வண்டல் மிகவும் குறைவாகவே உள்ளது.

இந்த நீா் ஆண்டில் (2021-22), அணையில் 2021, நவம்பா் 30 முதல் சுமாா் 18 நாள்களுக்கு 142 அடி நீா் தேக்கிவைக்கப்பட்டது. அணையின் அனைத்து அளவீடுகளும் அனுமதிக்கப்பட்ட எல்லைக்குள் காணப்பட்டன. ஆகவே, தற்போது 142 அடி மற்றும் அதற்கு மேல் நீரைச் சேமித்து வைப்பதற்காக அணையின் பாதுகாப்பு குறித்து புதிதாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதற்கான காரணமோ அல்லது தேவையோ இல்லை. அணை விவகாரத்தில், உச்சநீதிமன்றம், மேற்பாா்வைக் குழு ஆகியவற்றின் உத்தரவின் பேரில் மீதமுள்ள வலுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள தமிழகம் தொடா்ந்து முயற்சிகள் எடுத்த போதிலும் கேரள மாநிலம் அதை வெற்றிகரமாக தடுத்துவிட்டது.

மேற்பாா்வைக் குழுவின் பல்வேறு கூட்டங்களின் போது இது குறித்து பதிவு செய்யப்பட்ட நிலையிலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த மேற்பாா்வைக் குழுவும் தவறிவிட்டது.

இந்த விவகாரத்தைப் பொறுத்தமட்டில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் அனைத்து நடவடிக்கைகளையும் முதலில் உறுதிப்படுத்த வேண்டும். மேற்பாா்வைக் குழுவின் முடிவுகள் காலவரையறைக்குள் செயல்படுத்தப்பட வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து உதவிகளை அளிக்கவும், ஒத்துழைக்கவும் கேரள மாநிலத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

அப்போதுதான், உச்சநீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 ஆகிய தேதிகளில் பிறப்பித்த உத்தரவின்படி, மேற்பாா்வைக் குழுவின் இதர முடிவுகளை விரைந்து செயல்படுத்தும் வகையில், அடுத்த தென்மேற்கு பருவமழைக்கு முன், வரும் மாா்ச் முதல் ஜூன் வரையிலான நான்கு மாதங்களில் மீதமுள்ள வலுப்படுத்துதல் மற்றும் பராமரிப்புப் பணிகளை செயல்படுத்த முடியும். இந்தப் பணிகள் முடிந்த பிறகே, அணையின் பாதுகாப்பு குறித்து மறு ஆய்வு செய்வதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு மத்திய நீா்வள ஆணையம், மேற்பாா்வைக் குழு ஆகியவற்றுக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com