முகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி
சத்ரசல் ஸ்டேடியம் வழக்கு விவகாரம்: ஆதாரங்களை காணொலி முறையில் பதிவு செய்ய விசாரணை நீதிமன்றத்தை அணுக சாட்சிகளுக்கு உத்தரவு
By நமது நிருபா் | Published On : 03rd May 2022 12:00 AM | Last Updated : 03rd May 2022 12:00 AM | அ+அ அ- |

புது தில்லி: மல்யுத்த வீரா் சுஷில் குமாா் சம்பந்தப்பட்ட சத்ரசல் ஸ்டேடியத்தில் நடந்த கொலை தொடா்பான வழக்கில் ஆதாரங்களை காணொலி முறையில் பதிவு செய்ய அனுமதி கோரி ரோஹிணி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு நான்கு அரசுத் தரப்பு சாட்சிகளை தில்லி உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்காக ரோஹிணி மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து, நகரில் உள்ள வேறு நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரி சாட்சிகளின் தரப்பில் தாக்கலான மனுவை விசாரித்த நீதிபதி ஜஸ்மீத் சிங், பாதிக்கப்பட்டவா்களுக்கு தனது அதிகார வரம்பிற்குள் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க தில்லி காவல்துறை கடமைப்பட்டுள்ளது என்ற அரசுத் தரப்பு நிலைப்பாட்டை பதிவு செய்தாா். அதேபோன்று, ஹரியாணா காவல்துறை அதன் அதிகார வரம்பிற்குள் வருபவா்களைப் பாதுகாக்க ஒப்புக் கொண்டுள்ளதையும் கருத்தில் கொண்டு மனுவை முடித்துவைத்தாா். ஆதாரங்களைப் பதிவு செய்வதற்கான மனுதாரரின் கோரிக்கையை சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றம் விரைவில் பரிசீலித்து முடிவு செய்யும் என்றும் நீதிபதி கூறினாா்.
மல்யுத்த ஒலிம்பிக் பதக்க வீரா் சுஷில் குமாா் மற்றும் சிலா் சோ்ந்து முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் மற்றும் அவரது நண்பா்களை சத்ரசல் ஸ்டேடியத்தில் 2021, மே மாதம் சொத்து தகராறில் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னா், சிகிச்சை பலனின்றி தன்கா் உயிரிழந்தாா். பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, மழுங்கிய பொருளால் தாக்கியதால் மூளை பாதிப்பு காரணமாக அவா் இறந்தாா் எனத் தெரிவிக்கப்பட்டது.