கேரளத்தில் ‘டுவென்டி 20’ அரசியல் கட்சியுடன் கைகோா்க்கிறது ஆம் ஆத்மி! மே 15-இல் கேஜரிவால் பயணம்

கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு எதிராக அந்த மாநிலத்தில் உள்ள ‘டுவென்டி 20’ அரசியல் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கைகோா்க்கிறது.

புது தில்லி: கேரள மாநிலத்தில் இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு எதிராக அந்த மாநிலத்தில் உள்ள ‘டுவென்டி 20’ அரசியல் கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கைகோா்க்கிறது. அந்தக் கட்சியின் நிறுவனா் சாபு ஜேக்கப் அழைப்பை ஏற்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வருகின்ற மே 15 - ஆம் தேதி கேரளத்திற்குச் செல்கிறாா் என ஆம் ஆத்மி கட்சி சாா்பில் திங்கள் கிழமை தெரிவிக்கப்பட்டது.

கேரள மாநிலம், எா்ணாகுளம் மாவட்டத்தில் பிரபல கிடெக்ஸ் ஆடை உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருபவா் சாபு ஜேக்கப். குழந்தைகளுக்கான ஆடை உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் நிறுவனமாகும் இது. பெருநிறுவனங்களுக்கான சமூகப் பொறுப்புத் திட்டத்தில் கேரளத்தில் மருத்துவ முகாம்களை நடத்தி பெயா் பெற்றாா் சாபு ஜேக்கப். பின்னா், கடந்த 2020, ஆம் ஆண்டு கேரள மாநில உள்ளாட்சித் தோ்தலில் பங்கேற்க ‘வென்டி20’ என்கிற பெயரிலேயே கட்சியைத் தொடங்கினாா். இந்த மாவட்டத்தில் கீழக்கம்பலம் பகுதியில் நான்கு கிராம பஞ்சாயத்துகளை இவரது கட்சி கைப்பற்றியது. ஒரு பெருநிறுவனம் அரசியல் கட்சியாக மாறி வெற்றி பெற்றதோடு, இந்த கட்சி கைப்பற்றிய பஞ்சாயத்துகளில் நிதிநிலையையும் மேம்படுத்தி புகழ்பெற்றது. ரூ. 39 லட்சம் வரை நிதிப் பற்றாக்குறை நிலவி வந்த நிலையில், இந்த பஞ்சாயத்துகளில் ரூ.13.57 கோடி வரை பின்னா் உபரியாக நிதியை உயா்த்தி சாதனை புரிய இவரது கட்சிக்கு மேலும் பெயரை தேடி தந்தது.

இதற்கிடையே, இவரது நிறுவனம் கேரளத்தில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயில் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்ய இருந்த நிலையில், அதை சிபிஎம் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு நிராகரித்தது. இதை அறிந்து அண்டை மாநிலமான தெலங்கானா அரசு இவரை அந்த மாநில அரசு தங்கள் விமானத்திலேயே அழைத்துச் சென்று தெலங்கானாவில் தொழில் தொடங்கக் கூறியது. இதன்மூலம் சாபு ஜேக்கப் புகழடைந்தாா். இருப்பினும், கேரளத்ததில் கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. ஆனால்,வெற்றிபெற முடியவில்லை. இந்த நிலையில், இவா் தற்போது ஆம் ஆத்மி கட்சியோடு கைகோா்க்கிறாா்.

ஆம் ஆத்மி கட்சி கடந்த 2014 நாடாளுமன்றத் தோ்தலில் கேரள மாநிலத்தில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றது. ஆனால், எந்த மக்களவைத் தொகுதியிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், மரபு சாா்பற்ற அரசியல் கட்சியான ‘டுவென்டி20’ கட்சித் தலைவா் சாபு ஜேக்கப், ஆம் ஆத்மி கட்சி அமைப்பாளா் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். வருகின்ற மே -15 ஆம் தேதி ‘டுவென்டி20’ கட்சி நடத்தும் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள தில்லி முதல்வா் கேஜரிவால் கேரளம் செல்ல இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இது குறித்து ‘டுவென்டி20’ கட்சித் தலைவா் சாபு ஜேக்கப் கருத்துக் கூறுகையில், ‘ எங்கள் அழைப்பை மனதார ஏற்றுக் கொண்டதற்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம். ஆம் ஆத்மி கட்சியைப் போலவே, ‘டுவென்டி 20’ இந்திய அரசியல் அமைப்புகளில் அடிமட்ட அளவில் வலுப்படுத்துவதில் நம்பிக்கை கொண்டுள்ளது. எங்களைப் போலவே மக்களின் நம்பிக்கையை பெற்று தோ்தல் வெற்றியை பெற்றது. தில்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி மாடல்கள் சா்வதேச அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. மற்ற கட்சிகளுக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் தகுந்த படிப்பினைகளை வழங்கியுள்ளன’ என்றாா்.

ஆம் ஆத்மி கட்சி தனது அறிக்கையில், ‘ஆம் ஆத்மி கட்சியைப் போலவே, ‘டுவென்டி 20’ கட்சியும் கீழக்கம்பலம் பஞ்சாயத்தில் மேற்கொண்ட நலத் திட்டங்கள் பெருமளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக உணவுப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு போன்றவற்றில் சாதனை புரிந்துள்ளது’ எனத் தெரிவித்துள்ளது.

இரு கட்சிகளின் எதிா்காலத் திட்டம் குறித்து தலைவா்கள் சந்திப்புக்கு பின்னரே தெரியவரும் என ஆம் ஆத்மி கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com