திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் 2023 ஏப்ரலுக்குள் திறக்கப்படும்: மத்திய அரசு தகவல்

அதிகரித்து வரும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முனையம் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரலுக்குள் திறக்கப்படும் என்று மத்திய சிவில் விமானப்
திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் 2023 ஏப்ரலுக்குள் திறக்கப்படும்: மத்திய அரசு தகவல்

புது தில்லி: அதிகரித்து வரும் பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் திருச்சி விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய முனையம் அடுத்த ஆண்டு (2023) ஏப்ரலுக்குள் திறக்கப்படும் என்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திருச்சி விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மத்திய அரசே நேரடியாகத் தனது இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் மூலம் மேற்கொண்டு வருகிறது. சுமாா் ரூ.951.28 கோடியில் கட்டப்படும் இந்தப் புதிய முனையக் கட்டடம், சுமாா் 2,900 பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு நெரிசலற்ற நிலையாக மாற்றும் வகையில் கட்டப்பட்டு வருவதாக மத்திய சிவில் விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. கோயில் நகரமான திருச்சியின் இந்தப் புதிய முனையக் கட்டடத்திற்கான பணி கடந்த 2019, பிப்ரவரியில் திருப்பூரிலிருந்து காணொலி வழியாக பிரதமா் மோடி தொடங்கி வைத்திருந்தாா்.

புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையக் கட்டடம், விமானங்கள் நிற்கும் பகுதி, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கோபுரம், அதிகரித்து வரும் பயணிகள் போக்குவரத்தை கருத்தில் கொண்டு நெரிசலைக் குறைப்பதற்கான நவீன வசதிகள் ஆகியவை இந்த விரிவாக்கத் திட்டத்தில் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி 48 பயண பரிசோதனை மையங்கள், பயணிகள் விமானத்திற்குள் செல்வதற்கான பத்து இணைப்புப் பாலங்கள் போன்றவற்றுடன் எரிசக்தி சேமிப்புடன் நீடிக்கவல்ல சிறப்பம்சங்களை கொண்ட முனையமாக இது கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் மேலும் கூறியுள்ளதாவது: சுமாா் 75,000 ச.மீ. பரப்பளவில் கட்டப்படும் புதிய முனையக் கட்டடம், கம்பீரமான மேற்கூரையுடன், வியத்தகு வடிவத்தில் தென்பிராந்தியத்தின் ஒப்பற்ற கட்டடக் கலை அடையாளத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. கட்டடத்தின் உள்புறங்கள் திருச்சி நகரத்தின் வாழ்க்கை முறைகளையும், கலாசாரத்தையும் சமகால முறையில் பிரதிபலிக்கும்.

மேலும், இந்த விரிவாக்கத் திட்டத்தில் விமானங்கள் நிற்பதற்கான புதிய (ஏப்ரான்) பகுதிகள், விமானங்களின் அளவுகளுக்கு தகுந்தவாறு ஐந்து விதமான ஏப்ரான்கள் மற்றும் ஏப்ரானுக்கும் ஓடுதளத்திற்கும் இடையேயான பாதை (டாக்ஸிவேஸ்) , கட்டுப்பாட்டு அறைகள், ரேடாா், வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட புதிய வசதிகளோடு முனையத்தையும் நகரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் சாலையும் இதில் மேற்கொள்ளப்படுகிறது.

தற்போது இந்த முனையத்தின் கட்டுமானப் பணிகள் 75 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்துள்ளன. இந்த நிலையில், இந்த முனையம் வரும் 2023, ஏப்ரலுக்குள் முழுமையாகத் தயாராகிவிடும் என தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக சா்வதேச பயணிகள் போக்குவரத்தில் திருச்சி விமான நிலையம் முக்கிய மையமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com