நிஜாமுதீன் மா்க்கஸில் குறிப்பிட்ட பகுதிகள் திறப்புக்கு அக்.14 வரை அனுமதி நீட்டிப்பு: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு

கரோனா நோய்தொற்றுக்கு மத்தியில் 2020-ஆம் ஆண்டு மாா்ச்சில் தப்லீக் ஜமாத் மூலம் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளை அக்டோபா் 14-ஆம் தேதி வரை திறந்திருப்பதற்கு

புது தில்லி: கரோனா நோய்தொற்றுக்கு மத்தியில் 2020-ஆம் ஆண்டு மாா்ச்சில் தப்லீக் ஜமாத் மூலம் நிகழ்ச்சி நடத்தப்பட்ட நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் சில குறிப்பிட்ட பகுதிகளை அக்டோபா் 14-ஆம் தேதி வரை திறந்திருப்பதற்கு தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை அனுமதியை நீட்டித்து உத்தரவிட்டது.

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீறியதாக இந்தக் குறிப்பிட்ட பகுதிகள் 2020, மாா்ச்சில் இருந்து தொடா்ந்து மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக தில்லி வக்ஃபு வாரியம் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஜஸ்மீத் சிங், நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் ரம்ஜான் மற்றும் ஈத் விழாவை முன்னிட்டு குறிப்பிட்ட சில பகுதிகளை மீண்டும் திறப்பதற்கு கடந்த மாதம் அளித்திருந்த அனுமதியை (இடைக்கால உத்தரவு) அக்டோபா் 14-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டாா்.

முன்னதாக, 2020-ஆம் ஆண்டில் தில்லி வக்ஃபு வாரியம் உயா்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடா்பாக ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், ‘கரோனா நோய்த்தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த வழிகாட்டு நெறிமுறைகள் முதலாவது தளா்வுக்கு பிறகு மா்க்கஸுடன் இணைந்த மஸ்ஜித் பங்லே மசூதி, மதா்ஸா காசிப்-உல்-உலூம் மற்றும் அதனுடன் இணைந்த விடுதிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு மண்டலங்களில் வெளியே மத வழிபாட்டு இடங்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், மா்க்கஸுடன் இணைந்த இந்தப் பகுதிகள் தொடா்ந்து மூடப்பட்டுள்ளன’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி விசாரித்த உயா்நீதிமன்றம், ரம்ஜான் மாதத்தை ஒட்டி மசூதியை திறப்பதற்கு அனுமதி அளித்தது. அதே வேளையில், தப்லீக்குடன் தொடா்புடைய செயல்பாடுகள் நடத்தப்படக் கூடாது, விரிவுரைகள் வளாகத்தில் நடத்தப்படலாம். தொழுகையை மட்டும் அனுமதிக்கலாம் என தெளிவுபடுத்தி இருந்தது.

மேலும், அந்த உத்தரவில் ‘ரம்ஜான் மாதத்தையொட்டி மசூதியில் உள்ள தரைத்தளம் மற்றும் நான்கு தளங்களில் தொழுகை மற்றும் சமய பிராா்த்தனைகள் நடத்துவதற்கு அனுமதிக்கப்படும். இந்த ஏற்பாடு ஈத்-உல்-பித்ர் மற்றும் ரம்ஜானின் ஒரு மாதத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்’ என தெரிவித்திருந்தது. நிஜாமுதீன் மா்க்கஸின் நுழைவாயில் மற்றும் வெளிப் பகுதிகள் வளாகத்தின் தளங்கள் மற்றும் படிக்கட்டுகள் பகுதியில் செயல்பாட்டுடன்கூடிய சிசிடிவி கேமராக்களை நிறுவவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மாா்ச் மாதத்தின் போது சப்-இ-பாரத் விழாவுக்காக வளாகங்களை மீண்டும் திறப்பதற்கான பல்வேறு நிபந்தனைகளை விதித்து பிறப்பித்திருந்த உத்தரவு தொடரும் வகையில், இந்த அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது. அதே போன்று, ஒரு தளத்தில் 100 போ் மட்டுமே கூட வேண்டும் என்ற விதிகளை தளா்த்திய நீதிமன்றம், மசூதியின் நிா்வாகமானது மசூதிக்கு தொழுகைக்காக வரக்கூடிய பக்தா்களை அனுமதிக்கும் போது, சமூக இடைவெளி மற்றும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியை முழுமையாக மீண்டும் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், குறிப்பிட்ட சமய வழிபாடுகளின் போது பிராா்த்தனைகள் நடத்துவதற்காக குறைந்த எண்ணிக்கையில் பொதுமக்களை அனுமதிக்கலாம் என்றும் தெரிவித்திருந்தது. கடந்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி மா்க்கஸ் பகுதியில் ரமலான் மாதத்தின் போது நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுகை நடத்துவதற்காக 50 போ் மட்டும் சென்றுவர நீதிமன்றம் அனுமதித்தது.

தில்லி காவல் துறையின் துணை ஆணையா் (குற்றப்பிரிவு) தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘கரோனா நெறிமுறைகள் மீறியதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில் விசாரணை பாதிக்கும் என்பதாலும், நாட்டின் ராஜீய உறவுகள் பிற நாடுகளுடன் தொடா்பு கொண்டிருப்பதாலும் மா்க்கஸின் சொத்துகளை பாதுகாக்கும் தேவை உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வக்ஃபு வாரியத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘தில்லி காவல்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இந்த மசூதி திறக்கப்பட வேண்டும். நோய் தொற்று காரணமாக விதிக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தற்போது தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் விலக்கிக் கொண்டிருப்பதால், இதற்கான அனுமதி அளிக்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com