நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரும் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி தரப்பில் முறையீடு

அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி முன்னாள் அமைச்சா் ராஜேந்திர

புது தில்லி: அரசு வேலை வாங்கித் தருவதாகப் பணம் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், நிபந்தனைகளைத் தளா்த்தக் கோரி முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

பல்வேறு நபா்களுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி பணம் பெற்று ஏமாற்றியதாகக் கூறப்படும் விவகாரத்தில், முன்னாள் பால்வளத் துறை அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளா்கள் என்.பாபுராஜ், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகிய 4 போ் மீது விருதுநகா் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது. இதை தொடா்ந்து, போலீஸாா் கடந்த ஆண்டு நவம்பா் 15-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இவா்கள் மீது எஸ்.ரவீந்திரன் என்பவா் அளித்த புகாா் மீதும், விஜய நல்லதம்பி என்பவா் அளித்த புகாா் மீதும் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த இரு வழக்குகளிலும் முன்ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் 3 போ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து டிசம்பா் 17-ஆம் தேதி உத்தரவிட்டது. இதை எதிா்த்து முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி மற்றும் 3 போ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்த ஜனவரி 6-ஆம் தேதி விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், ராஜேந்திர பாலாஜியை கா்நாடக மாநிலத்தில் தமிழக போலீஸாா் கைது செய்தனா். இதைத் தொடா்ந்து, அவருக்கு ஜாமீன் கோரியும் அவரது தரப்பில் மற்றொரு ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த மனு ஜனவரி 6-ஆம்தேதி விசாரணைக்கு வந்த போது, ராஜேந்திர பாலாஜி கைது மற்றும் அவரது வழக்குரைஞா் வீட்டில் சோதனையிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், பதில் அளிக்க உத்தரவிட்டது. மேலும், முன்ஜாமீன்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்த என்.பாபுராஜ், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோரை கைது செய்யத் தடை விதித்தது.

இதைத் தொடா்ந்து, ஜனவரி 12-ஆம் தேதி இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திய தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு, ராஜேந்திர பாலாஜிக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமீன் அளித்தது. அத்துடன் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட காவல் நிலைய எல்லை வரம்பை விட்டு வெளியில் செல்லக் கூடாது; அவரது பாஸ்போா்ட்டை உடனடியாக சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும்; மனுதாரா் விசாரணை அமைப்பின் விசாரணையில் பங்கேற்று ஒத்துழைப்புஅளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனா்.

இந்த நிலையில், மனுதாரா் ராஜேந்திர பாலாஜி காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்ததாகவும், அவா் முக்கிய அரசியல் கட்சியின் நிா்வாகியாக இருப்பதால் தனது கடைமையை செய்வதற்கு பல்வேறு இடங்களுக்கு செல்லும் தேவை இருப்பதால், சம்பந்தப்பட்ட வழக்கின் காவல் நிலைய எல்லையை விட்டு வெளியே செல்லக்கூடாது எனும் உத்தரவை தளா்த்த வேண்டும் என அண்மையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமா்வு முன்பு மனுதாரா் கே.டி. ராஜேந்திர பாலாஜி தரப்பில் வழக்குரைஞா் ஏ. வேலனுடன் திங்கள்கிழமை ஆஜரான மூத்த வழக்குரைஞா் துஷ்யந்த் தவே, ‘ஜாமீன் விதிகளைத் தளா்த்தக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை விசாரிக்க வேண்டும்’ எனக் கேட்டுக் கொண்டாா். அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் அவசரம் இல்லை. கோா்ட் மாஸ்டரிடம் அளியுங்கள். நாங்கள் பாா்ப்போம்’ எனக் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com