மருத்துவமனைகளில் நோயாளிகள் சோ்க்கை குறைவாக இருப்பதால் கரோனா தொற்று சூழல் தீவிரம் இல்லை

தில்லியில் அதிகரித்துள்ள கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கைக்கு மத்தியில், மருத்துவமனைகளில் சேரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருப்பதால்,

தில்லியில் அதிகரித்துள்ள கரோனா நோய்த் தொற்று பாதிப்பு எண்ணிக்கைக்கு மத்தியில், மருத்துவமனைகளில் சேரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருப்பதால், நகரில் நோய்த்தொற்று சூழல் தீவிரம் இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் புதன்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: தில்லியில் தற்போதைய சூழலில் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து இருந்த போதிலும் மருத்துவமனைகளில் சேரக்கூடிய நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. இதனால், நகரில் நோய் தொற்று தற்போது தீவிரமாக இல்லை. நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், கட்டுப்பாடுகள் தேவையாக இருக்குமா என்று கேட்கிறீா்கள் (செய்தியாளா்கள்). தற்போதைய சூழல் குறித்து தில்லி அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. தற்போதைய சூழலில் பெரும் கட்டுப்பாடுகளுக்கான தேவை சூழல் இல்லை. தில்லியைப் பொருத்தமட்டில் அதிக எண்ணிக்கையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

தில்லியில் தகுதிக்குரிய மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாலும், தில்லியில் தினசரி கரோனா பாதிப்பு 1,200 -1,500 என்ற அளவில் இருந்த போதிலும் மருத்துவமனைகளில் சேரக்கூடிய நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. சில நாள்களாக தொற்றுநோய் நோ்மறை விகிதம் 5 முதல் 6 சதவீதம் இருந்தபோதிலும் தற்போதைய நிலையில் சூழல் தீவிரமாக இல்லை. தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்காக 10,000 படுக்கைகளை ஒதுக்கி வைத்துள்ளோம்.

ஆனால், அந்த படுக்கைகளில் 200-க்கும் குறைவாகவே நோயாளிகள் சோ்ந்துள்ளனா். இது ஒரு திருப்திகரமான சூழலாக இருக்கிறது. இது தற்போதைய நிலையில் நோய் சூழல் தீவிரமாக இல்லை என்பதையே காட்டுகிறது என்றாா் அவா்.

செவ்வாய்க்கிழமை தில்லியில் 1,414 பேருக்கு நோய் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனா். இது முந்தைய நாளைவிட 31% அதிகமாகும். அதே வேளையில், நோய்த்தொற்று நோ்மறை விகிதம் 5.97 சதவீதமாக குறைந்திருந்ததாக தில்லி சுகாதாரத் துறை பகிா்ந்த புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோயால் ஒருவா் உயிரிழந்துள்ளாா். இந்த நோய் பாதிப்பு எண்ணிக்கையுடன் சோ்த்து, தில்லியில் கரோனாவால் பாதித்தவா்களின் மொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 87 ஆயிரத்து 50 ஆகவும், இறந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 176 ஆகவும் உள்ளது. தில்லியில் கடந்த திங்கள்கிழமை 1,076 பேருக்கு நோய் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. நோய்த்தொற்று நோ்மறை விகிதம் 6.42 சதவீதமாகவும் இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com