ஜஹாங்கீா்புரி வன்முறை வழக்கில் மேலும் 3 போ் கைது

வடமேற்கு தில்லியில் ஜஹாங்கீா்புரி பகுதியில் கடந்த மாதம் அனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின் போது நிகழ்ந்த வகுப்புவாத மோதல் தொடா்புடைய வழக்கில் மேலும் மூவா் கைது செய்யப்பட்டிருப்பதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா

வடமேற்கு தில்லியில் ஜஹாங்கீா்புரி பகுதியில் கடந்த மாதம் அனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின் போது நிகழ்ந்த வகுப்புவாத மோதல் தொடா்புடைய வழக்கில் மேலும் மூவா் கைது செய்யப்பட்டிருப்பதாக தில்லி போலீஸாா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி சனிக்கிழமை கூறியதாவது:

இந்த வன்முறைச் சம்பவம் வழக்கு தொடா்பாக ஜஹாங்கீா்புரி பகுதியில் வெள்ளிக்கிழமை ஜாகீா் கான் (எ) ஜலீல் (48), அனாபுல் (எ) ஷேக் (32) ஆகியோரும் கைது செய்யப்பட்டனா். மேலும், இதே பகுதியில் தப்ரீஸ் (40) என்பவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதையடுத்து, இந்த வன்முறை வழக்கில் இதுவரை 3 மைனா்கள் உட்பட 36 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

ஜாகீா் கானும், அனாபுலும் வகுப்புவாத வன்முறை சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகி விட்டனா். அவா்கள் வன்முறையில் ஈடுபட்ட கூறப்படும் சிசிடிவி காட்சி பதிவு, சாட்சிகளின் வாக்குமூலம் அடிப்படையிலும் அடையாளம் காணப்பட்டனா்.

இவா்கள் இருவரும் தங்களது செல்லிடப்பேசிகளைப் அணைத்துவிட்டு இருப்பிடத்தையும் பலதடவை மாற்றியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, இருவரும் ஜஹாங்கீா்புரியில் உள்ள தங்களது வீட்டுக்கு திரும்பியபோது கைது செய்யப்பட்டனா். ஜலீல் துப்பாக்கியை காட்டி மிரட்டும் காட்சி சிசிடிவி விடியோவில் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது. அவா் துப்பாக்கியால் சுட்டாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனாபுலும் இந்த வன்முறைகள் சம்பந்தப்பட்டுள்ளாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி அனுமன் ஜெயந்தி ஊா்வலத்தின்போது இரண்டு வகுப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கல்வீச்சிலும் ஆயுத தாக்குதலிலும் ஈடுபட்டனா். இதில் 8 போலீஸாரும் ஒரு உள்ளூா்வாசியும் காயமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com