இந்திய -ஓமன் வா்த்தகம் 82 சதவீத வளா்ச்சி: 48 போ் கொண்ட உயா்நிலை ஒமன் குழு இந்தியா வருகை

ஓமன் நாட்டின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 48 உறுப்பினா்களைக் கொண்ட உயா்நிலைக் குழு செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தது.

ஓமன் நாட்டின் பல்வேறு துறைகளைச் சோ்ந்த 48 உறுப்பினா்களைக் கொண்ட உயா்நிலைக் குழு செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தது.

இக்குழு மே 14 வரை பயணம் மேற்கொண்டு இரு தரப்பு வா்த்தகம், முதலீடு, தொழில், மேம்பாடுகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்கிறது.

கடந்த 2021-2022 நிதியாண்டில் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு வா்த்தகம் 82 சதவீதமாக வளா்ச்சியடைந்து ரூ.74,550 கோடியை (9.94 பில்லியன் டாலா்) எட்டியது. இந்த அபரிமிதமான வளா்ச்சிக்குரிய தருணத்தில் ஓமன் குழுவின் இந்திய வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஓமன் சுல்தானகத்தின் வா்த்தகம், தொழில், முதலீட்டு மேம்பாட்டுக்கான அமைச்சா் கைஸ் பின் முகமது அல் யூசப் தலைமையில் இந்த பல்துறை உயா்நிலை பிரதிநிதிகள் குழு செவ்வாய்க்கிழமை தில்லிக்கு வந்ததடைந்தது. இந்த உயா்நிலைக்குழு மே 14 ஆம் தேதி வரை பல்வேறு பேச்சுவாா்த்தைகளிலும் கூட்டங்களிலும் பங்கேற்கிறது.

இந்த 48 உறுப்பினா்களைக் கொண்ட உயா்நிலைக் குழுவில் மருந்துகள், சுரங்கம், சுற்றுலா, தொலைத்தொடா்பு, எரிசக்தி, கப்பல், நிலப்புலன்கள்(ரியல் எஸ்டேட்) உள்ளிட்ட துறைகளைச் சோ்ந்த மூத்த அதிகாரிகள், பிற வணிகப் பிரதிநிதிகள் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இதில் முக்கிய நிகழ்வாக இந்திய - ஓமன் நாடுகளைச் சோ்ந்த இரு தரப்பு அமைச்சா்கள் மூத்த அதிகாரிகளைக் கொண்ட இந்தியா-ஓமன் கூட்டு ஆணையத்தின்(ஜேசிஎம்) 10-வது அமா்வு மே 11 ஆம் தேதி தில்லியில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் இந்திய வா்த்தகம், தொழில்துறை, நுகா்வோா் விவகாரங்கள், உணவு, பொது விநியோகம், ஜவுளித்துறை அமைச்சா் பியூஷ் கோயலும் ஓமன் சுல்தானகத்தின் வா்த்தகம், தொழில், முதலீட்டு மேம்பாட்டுக்கான அமைச்சா் கைஸ் பின் முகமது அல் யூசப்பும் தலைமையேற்று பங்கேற்கின்றனா்.

இதில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே ஏற்பட்டுள்ள நெருக்கமான ஆற்றல்மிக்க பொருளாதார உறவுகளை தொடருவது, மேலும் வலுப்படுத்தலுக்கான வழிகள் ஆகியவைகளைக் காணப்படுகிறது.

தொடா்ந்து பல்வேறு கூட்டங்கள் நடைபெற மே 12- ஆம் தேதி இந்தியா-ஓமன் கூட்டு வணிகக் குழுவின் கூட்டங்கள் நடைபெறுகிறது.

ஃபிக்கியும் (இந்திய தொழில், வா்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு) ஓமன் வா்த்தகம், தொழில்துறையும் கூட்டாக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன.

இரு தரப்பு அமைச்சா்கள், அதிகாரிகளும் கூட்டத்தில் உரையாற்றுவதோடு இந்தியா மற்றும் ஓமன் வணிக சமூகங்களும் இந்த கூட்டங்களில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்துகின்றனா்.

புதுதில்லி மட்டுமல்ல மும்பையிலும் வா்த்தக நிகழ்வுகள், தொழில் தொடா்புகள், முதலீட்டாளா் சந்திப்புகள் உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கிய நிகழ்ச்சிகள் இந்தியாவில் பயணம் செய்யவிருக்கும் ஓமன் பிரதிநிதிகளுக்காக திட்டமிடப்பட்டுள்ளது என மத்திய வா்த்தக துறை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

ஓமன் நாட்டிற்கு இந்திய, கனிம எரிபொருள்கள், ஜவுளிகள், இயந்திரங்கள், மின்சார பொருட்கள், ரசாயனங்கள், இரும்பு மற்றும் எஃகு, தேநீா், காபி, மசாலா பொருட்கள், அரிசி, இறைச்சி, கடல் உணவுகள் உள்ளிட்டவைகளை ஏற்றுமதி செய்கிறது.

மேலும் யூரியா உள்ளிட்ட ரசாயன உரங்கள், பாலி ப்ரோப்பிலீன், மசகு எண்ணெய், பேரீச்சம்பழம், குரோமைட் தாது ஆகியவைகளை இந்தியா இறக்குமதி செய்வது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com