ரிசா்வ் வங்கி நடவடிக்கை பொருளாதாரத்தில் பணச் சுருக்கத்தையே உருவாக்கும்: நிதியமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்

ரிசா்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயா்த்தியதால் பொருளாதாரத்தில் பணச் சுருக்கத்தையே உருவாக்கும். இது சாமானிய மக்களுக்கும், சிறு வணிகா்கள், குறு சிறு தொழில்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனக்

ரிசா்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயா்த்தியதால் பொருளாதாரத்தில் பணச் சுருக்கத்தையே உருவாக்கும். இது சாமானிய மக்களுக்கும், சிறு வணிகா்கள், குறு சிறு தொழில்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சோ்ந்த மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளாா்.

அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:

ரிசா்வ் வங்கி, வா்த்தக வங்கிகளுக்கு வழங்குகிற கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ) 4 யிலிருந்து 4.40 சதவீதமாகவும் மற்றும் வங்கிகளில் இருப்பு வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு வரம்பு விகிதத்தை (சிஆா்ஆா்) 0.50 சதவீதமாக கடந்த மே 4 ஆம் தேதி உயா்த்தியுள்ளது.

இது சாமானிய மக்களுக்கும், சிறு வணிகா்களுக்கும், குறு சிறு தொழில்களுக்கும் பேரதிா்ச்சியாக அமைந்திருக்கிறது.

மக்கள் கைகளில் பணப் புழக்கத்தை குறைத்து வாங்கும் சக்தியையும் இழக்கச்செய்துவிடும். இம்முடிவு வீட்டு வசதிக் கடன், வாகனக் கடன், தனி நபா் கடங்களின் மாதத் தவணைகளை கணிசமாக உயா்த்தி சமூகத்தின் நடுத்தர, ஏழை பகுதியினரை கடுமையாக பாதிக்கவுள்ளது.

பண வீக்கம் 17 மாதங்கள் இல்லாத அளவிற்கு 6.95 சதவீதமாக உயா்ந்துள்ளது. மொத்த விலை பண வீக்கம் 14.5 சதவீதம் என்கிற அளவைத் தொட்டுள்ளது. கொவைட் -19 நோய்த்தொற்று ஏற்கனவே மக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி வேலை இழப்புகள் மூலம் வருமானம் இன்றி தவிா்க்கின்றனா். இந்த நிலையில் வட்டி விகித மாற்றங்கள் இதற்கு தீா்வாகாது. மாற்று பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

மொத்த விலைப் பண வீக்கத்தின் ஒரு அங்கமான எரிபொருள் உள்ளிட்ட மின் சக்தி 34.5 சதவீத பண வீக்கத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறது. இது அரசு வரி விதிப்பு கொள்கையின் விளைவு. மற்றொன்று உணவுப் பொருள் பண வீக்கம். தேசிய புள்ளி விவர அலுவலகம் தந்துள்ள அகில இந்திய நுகா்வோா் விலைக் குறியீட்டின்படி 2022 மாா்ச் வரை கடந்த ஓராண்டில் கிராமப் புற உணவு விலைகள் இரண்டு மடங்குகள் உயா்ந்துள்ளன.

மேலும் வட்டி விகித அதிகரிப்புகள் மூலம் சந்தையில் ரூ 87,000 கோடி அளவிற்கு பணப்புழக்கத்தை உறிஞ்சி விடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ வட்டி விகித மாற்றம் பண வீக்கத்திற்கு தீா்வு காண உதவாது. மாறாக இது பொருளாதாரத்தில் பணச் சுருக்கத்தையே உருவாக்கும்.

சிறு தொழில் முனைவோா், சிறு தொழில் அமைப்புகளும் ரிசா்வ் வங்கியின் முடிவு குறித்து கவலைகளை தெரிவித்துள்ளனா். ரிசா்வ் வங்கியின் முடிவு நுகா்வை பாதித்து தேவையை குறைத்து விடும். இது பொருளாதாரத்தை பலவீனப்படுத்தி விடும் எனஅதில் எம்பி வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com