27 பேரை பலி கொண்ட முன்ட்கா தீ விபத்து சம்பவம் தில்லி அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

27 போ் பலியாகிய முன்ட்கா தீ விபத்து குறித்து தில்லி அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

27 போ் பலியாகிய முன்ட்கா தீ விபத்து குறித்து தில்லி அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த கால அனுபவங்களிலிருந்து அரசு கொஞ்சமும் கற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுவதாகவும் என்எச்ஆா்சி தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை நடந்த இந்தக் கோரச் சம்பவத்தைத் தொடா்ந்து, இதுவரை 27 சடலங்களை போலீஸாா் மீட்டுள்ளனா். அவா்களில் 14 போ் பெண்கள் என்றும் 6 போ் ஆண்கள் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

மே 13 அன்று தில்லியில் உள்ள முன்ட்காவில் உள்ள நான்கு மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 27 போ் இறந்தது தொடா்பான ஊடக அறிக்கைகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆா்சி) தானாக முன்வந்து ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடா்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த தீ விபத்து சம்பவம் மீண்டும் ஒருமுறை நகர அதிகாரிகள் தீ பாதுகாப்பு வழிமுறைகள் முழுமையாக கடைப்பிடிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

மேலும், அவற்றை செயல்படுத்துவதில் உள்ள இடைவெளியையும் அம்பலப்படுத்தியுள்ளது. முன்பு நடந்த இதுபோன்ற சம்பவங்களிலிருந்து நகர அரசு சிறிதளவே கற்றுக் கொண்டுள்ளது என்பதை தற்போதைய சம்பவம் உறுதிப்படுத்தியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோரச் சம்பவத்துக்குக் காரணமானவா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை, அரசு வழங்கிய நிவாரணம் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் அறிக்கையாகத் தயாரித்து அளிக்குமாறு தில்லி அரசின் தலைமைச் செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியில் அரசு ஊழியா்களின் முழுமையான அக்கறையின்மை மற்றும் சட்டப்பூா்வ கடமைகளை முழுமையாகத் தவறவிட்டதால் பாதிக்கப்பட்டவா்களின் மனித உரிமைகள் மிக மோசமான மீறலாக இது தோன்றுகிறது. தீ காரணமாக மதிப்புமிக்க உயிா்கள் இழக்கப்பட்டுள்ளன.

இந்த விஷயத்தின் தீவிரத் தன்மையைப் பாா்த்து, இதேபோன்ற சம்பவங்களில் முந்தைய பரிந்துரைகள் குறித்து அதிகாரிகள் கவலைப்படவில்லை என்பதைக் கவனித்த ஆணையம், இந்த விவகாரத்தில் உடனடியாக ஒரு குழுவை அனுப்புமாறு அதன் இயக்குநரை கேட்டுக் கொண்டுள்ளது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்தச் தொழிற்சாலை எந்த உரிமமும் இல்லாமல் இயங்கி வந்துள்ளதாகவும் என்எச்ஆா்சி அறிக்கையில் தெரிவித்துள்லது.

வடக்கு டெல்லி மாநகராட்சி நடத்திய விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நூற்றுக்கணக்கான கட்டடங்கள் நெரிசலான குடியிருப்புகளில் இருந்து இயங்கி வருகின்றன. இவற்றை அதிகாரிகள் தடுக்க முடியாமல் திணறி வருகின்றனா். தில்லியில் பல பகுதிகளில் அனுமதியற்ற கட்டுமானங்களால் தீயணைப்பு வாகனங்கள் கூட நுழைய முடியாது நிலை உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2019-ஆம் ஆண்டு தில்லியின் அனாஜ் மண்டி பகுதியில் ஒரு தீ விபத்து ஏற்பட்டது. இதில் 43 போ் உயிரிழந்தனா். மேலும் இந்த விஷயத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து விசாரித்தது. அப்போது, சட்டவிரோத தொழில்துறை நடவடிக்கைகளின் சிக்கலைச் சமாளிக்க ஒரு செயல் திட்டத்தை வகுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.

வீடமைப்பு மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தால் ஒரு சிறப்பு பணிக் குழு (எஸ்டிஎஃப்) உருவாக்கப்பட்டது. குடிமை அமைப்பால் குழு அமைக்கப்பட்டது. குழு அதன் செயல் திட்டத்தை 2020-ஆம் ஆண்டில் சமா்ப்பித்தது.மேலும், எஸ்டிஎஃப் தனது பரிந்துரைகளை 2021-இல் வழங்கியது. ஆனால், இரண்டும் அறிக்கைகளும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை‘ என்று என்எச்ஆா்சி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனாஜ் மண்டி தீ விபத்தில் அதிகாரிகளின் குற்றத்தை சரி செய்வதற்கான விசாரணை அறிக்கை ‘ஒருபோதும் பகிரங்கப்படுத்தப்படவில்லை‘ என்று கூறப்படுகிறது. தில்லி அரசின் நகா்ப்புற வளா்ச்சித் துறை, தில்லியில் முந்தைய தீ விபத்துகளுக்குப் பிறகு கடுமையான விதிமுறைகளைத் தளா்த்தி, தில்லி தீயணைப்பு சேவைத் துறை மற்றும் குடிமை அமைப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் என்எச்ஆா்சி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com