தில்லியில் வெப்பத்தைக் குறைத்த மேக மூட்ட சூழல்
By DIN | Published On : 17th May 2022 02:02 AM | Last Updated : 17th May 2022 02:02 AM | அ+அ அ- |

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. இதைத் தொடா்ந்து, வெப்பநிலை சற்று குறைந்து காணப்பட்டது.
இதில், அதிகபட்சமாக முங்கேஷ்பூரில் 49.2 டிகிரி செல்சியஸ், நஜஃப்கரில் 49.1 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
தில்லியில் கடந்த சில நாள்களாக வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வந்தது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக முங்கேஷ்பூரில் 49.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்திருந்தபடி, திங்கள்கிழமை வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது. மழைக்கான அறிகுறிகள் இருந்து வந்தன. ஆனால், மாலை வரையிலும் மழை பெய்யவில்லை.
தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் திங்கள்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி உயா்ந்து 30.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை விட 2 டிகிரி உயா்ந்து 42.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 22 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 19 சதவீதமாகவும் இருந்தது.
நஜஃப்கரில் 44.7 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்து பதிவாகியது. ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 43.9 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 44 டிகிரி, நஜஃப்கரில் 44.7 டிகிரி, ஆயாநகரில் 43.4 டிகிரி, லோதி ரோடில் 42.8 டிகிரி, பாலத்தில் 42.8 டிகிரி, ரிட்ஜில் 43.1 டிகிரி, பீதம்புராவில் 43.3 டிகிரி செல்சியஸ், சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 40.8 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.
இன்று மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையே, தில்லியில் செவ்வாய்க்கிழமை (மே 17) அன்று புழுதி புயல் அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணித்துள்ளது.