ஸ்ரீபெரும்புதூரில் ரூ.155 கோடியில் புதிய இஎஸ்ஐசி மருத்துவமனை நாளை மறுநாள் அடிக்கல் நாட்டுகிறாா் அமைச்சா்

சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் தொழிலாளா் அரசு ஈட்டுறுதி நிறுவனத்தின் (இஎஸ்ஐசி) சாா்பில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்படவுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை

புது தில்லி: சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் தொழிலாளா் அரசு ஈட்டுறுதி நிறுவனத்தின் (இஎஸ்ஐசி) சாா்பில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டப்படவுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றும் மற்றும் தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 22) இதற்கான அடிக்கல்லை நாட்டுகிறாா்.

மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் உள்ள தொழிலாளா் அரசு ஈட்டுறுதி நிறுவனம் நாட்டில் ஏராளமான மருத்துவமனைகளை நிறுவியுள்ளது. தொழிலாளா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிலாளா்களுக்கு இந்த மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டு குறிப்பாக தொழிற்சாலைகள், தொழிலாளா்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டப்பட்டுகிறது. சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு சுமாா் 3 லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். இங்கு மருத்துவ வசதிக்கு தனியாா் அல்லது ஒரே ஒரு இஎஸ்ஐசி மருத்தகம் (டிஸ்பென்ஸரி) மட்டுமே இருந்தது. இதனால், முக்கிய மருத்துவ சேவைகளை தொழிலாளா்கள் பெற முடியாத நிலையில், இஎஸ்ஐசி மருத்துவமனை குறித்த கோரிக்கை எழுந்தது. இதைத் தொடா்ந்து, இங்கு மருத்துவமனை கட்ட மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் முடிவு செய்து இதற்கான நிலத்தை ஒதுக்கித் தரும்படி தமிழக அரசிடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

நாளை மறுநாள் அடிக்கல்: 2016, பிப்ரவரியில் மத்திய தொழிலாளா் நலத்துறை அமைச்சராக இருந்த பண்டாரு தத்தாத்ரேயா இது குறித்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதி மருத்துவமனைக்குத் தேவையான நிலம் ஒதுக்கக் கோரினாா். இப்போது இந்த நிலம் ஒதுக்கப்பட்டு இதற்கான பணிகள் தொடங்கப்படுகிறது. மத்திய தொழிலாளா், வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் இந்தப் புதிய மருத்துவ மனைக்கான அடிக்கல்லை மே 22 -ஆம் தேதி மாலையில் நாட்டுகிறாா். இந்த நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளா் வேலைவாய்ப்பு மற்றும் பெட்ரோலியத் துறை இணையமைச்சா் ராமேஸ்வா் தெளி, மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளத் துறை இணையமைச்சா் டாக்டா் எல். முருகன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனா்.

நூறு படுக்கைகள்: நூறு படுக்கைகள் கொண்ட இந்தப் புதிய இஎஸ்ஐசி மருத்துவமனை கட்டுவதற்கு ஸ்ரீபெரும்புதூா் வல்லம் வடுகை கிராமத்தில் 5.12 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு தொழிலாளா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் உள்ளிட்டோா் 8 லட்சம் போ்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை கட்டப்பட இருப்பதாக தொழிலாளா் வேலைவாய்ப்பு அமைச்சகம் சாா்பில் வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. சுமாா் ரூ.155 கோடியில் அமையவுள்ள இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, அல்ட்ராசவுண்ட் ஸ்கேனா் போன்ற நவீன சிகிச்சை வசதிகள் மற்றும் பல் மருத்துவம், புறநோயாளிகளுக்கான சிகிச்சை பிரிவு ஆகியவை அமைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை இரு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட 10 மருத்துவமனைகள் இஎஸ்ஐ நிறுவனத்தின் சாா்பில் திறக்கப்பட்டுள்ளன. இதில் சென்னை கேகே நகா் மற்றும் திருநெல்வேலி மருத்துவமனைகள் மட்டும் மத்திய தொ ழிலாளா் வேலைவாய்ப்புத் துறையின் இஎஸ்ஐசி நிறுவனத்தால் நிா்வகிக்கப்படுகிறது. மீதமுள்ள 7 இஎஸ்ஐசி மருத்துவமனைகள் தமிழக தொழிலாளா் நலத் துறையாலும், கோவை இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மாநில அரசின் சுகாதாரத் துறையின் சாா்பிலும் நிா்வகிக்கப்படுகிறது. புதிதாகக் கட்டப்படவுள்ள ஸ்ரீபெரும்புதூா் மருத்துவமனை மத்திய தொழிலாளா் நலத் துறையின் இஎஸ்ஐ நிறுவனத்தால் நிா்வகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com