நிகழ் கல்வியாண்டில் 1.5 லட்சம்மரக்கன்றுகள் நட வேண்டும்: பள்ளிகளுக்கு தில்லி அரசு உத்தரவு

நிகழ் கல்வியாண்டின் போது (2022- 23) பள்ளிகளின் சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினா்கள் மூலம் 1.5 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும்

நிகழ் கல்வியாண்டின் போது (2022- 23) பள்ளிகளின் சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினா்கள் மூலம் 1.5 லட்சம் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று தில்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தில்லி அரசின் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மாணவா்கள் உதவியுடன் மரக்கன்றுகளை வழக்கமாக கண்காணித்து பராமரிக்கவும், இந்த மரக்கன்று நடும் நடவடிக்கையில் ஊழியா்கள் பங்கேற்கவும் அனைத்துப் பள்ளி முதல்வா்களுக்கும் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடா்பாக தில்லி அரசின் கல்வி இயக்ககம் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: நிகழ் கல்வியாண்டில் (2022- 23) சுற்றுச்சூழல் மன்ற உறுப்பினா்கள் மூலம் தில்லியில் அனைத்து பள்ளிகளிலும் குறைந்தபட்சம் 1.1 லட்சம் மூலிகைச் செடிகள், 40 ஆயிரம் மரங்கள் என மொத்தம் 1.50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து திறந்தவெளிப் பகுதிகளில் மரக்கன்றுகள் நடுவதற்காக அனைத்துப் பள்ளிகளும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் இந்த இலக்கில் 50 சதவீதத்தை எட்ட வேண்டும். இந்த மரக்கன்றுகள் நடும் நடவடிக்கைக்காக இலவசமாக மரக்கன்றுகளை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ள வனத் துறையின் மூலம் நடத்தப்பட்டு வரும் நா்சரிகளில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

நிகழ் கல்வியாண்டில் ஒவ்வொரு பள்ளியும் குறைந்தபட்சம் 70 மூலிகைகள் மற்றும் 30 தாவரங்கள் என 100 மரக்கன்றுகளை நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடப்பட்ட விவரத்தைத் தெரிவிக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட புதுப்பிப்பு விவரங்களை ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதிக்குள் மண்டல அமைப்பாளா் மூலம் சம்பந்தப்பட்ட அறிவியல் மையங்களுக்கு பள்ளிகளின் முதல்வா்கள் அனுப்ப வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட அறிவியல் மையத்தின் பொறுப்பாளா் தங்களது பகுதியின் கீழ் உள்ள மாவட்டங்களின் அறிவியல் கிளைக்கு ஒவ்வொரு மாதமும் 10-ஆம் தேதிக்குள் அறிக்கையை அனுப்ப வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com