அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துகிறாா்-துணைநிலை ஆளுநா் மீது துா்கேஷ் பதக் குற்றச்சாட்டு
By DIN | Published On : 05th November 2022 10:28 PM | Last Updated : 05th November 2022 10:28 PM | அ+அ அ- |

தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்தி வருவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவா்களில் ஒருவரான துா்கேஷ் பதக் சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.
மேலும், அவா் அரசியலில் சோ்ந்து தில்லி மாநகராட்சி தோ்தலில் போட்டியிட வேண்டும் என்றும் துா்கேஷ் கேட்டுக்கொண்டாா்.
நிகழாண்டு மே மாதம் துணைநிலை ஆளுநராக வி.கே. சக்சேனா பதவியேற்றதில் இருந்து தில்லி தொடா்புடைய பல்வேறு விவகாரங்களில் தில்லி அரசுக்கும் அவருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
கடந்த அக்டோபா் 4-ஆம் தேதி, மின்சார மானியத் திட்டத்தில் நிகழ்ந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டாா். இந்த விவகாரம் குஜராத் தோ்தலுடன் தொடா்புடையதாகும் என ஆம் ஆத்மி தலைவா்கள் அவா் மீது குற்றம்சாட்டினா்.
இதற்கு முன்னா், கடந்த ஜூலையில் தில்லி கலால் கொள்கை 2021-22 அமலாக்கத்தில் விதிகள் மீறப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடா்பாகவும் சிபிஐ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் பரிந்துரை செய்திருந்தாா்.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் முதல்முறையாக துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா மீது வெளிப்படையாக குற்றம் சுமத்தினாா்.
ஆம் ஆத்மி கட்சி அரசின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் துணைநிலை ஆளுநா் இடையூறு செய்து வருவதாகவும் முதல்வா் குற்றம் சாட்டினாா்.
ஆம் ஆத்மி கட்சித் தலைவா்களில் ஒருவரான துா்கேஷ் பதக் சனிக்கிழமை கூறுகையில், ‘தில்லி மாநகராட்சியில் ஒரு மாற்றம் இருக்கிறது. தற்போது மாநகராட்சியில் 250 வாா்டுகள் உள்ளன. எங்களிம்கூட ஒரு முன்மொழிவு உள்ளது. அதாவது, தில்லியில் நடைபெறும் மாநகராட்சி தோ்தலில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா போட்டியிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
தேசிய தலைநகரில் அவா் தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி வருகிறாா். அவரை தில்லி மக்கள் ஆதரிக்கிறாா்களா அல்லது இல்லையா என்பதை நாங்கள் பாா்ப்போம்’ என்று துா்கேஷ் தெரிவித்துள்ளாா்.
இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் மற்றொரு தலைவா் அதிஷி கூறுகையில், மாநகராட்சித் தோ்தலில் வெற்றிபெறுவதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பாஜக சுமத்தி வருகிறது. ஆம் ஆத்மி கட்சியைத் தோற்கடிக்க எவ்வித வழியும் அக்கட்சிக்குத் தெரியாமல் மோசமான சூழலில் உள்ளது. இதனால்தான் நாட்டின் மிகவும் பிரபலமான ‘மாபெரும் குண்டா்’ தற்போது பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகராக உள்ளாா். குஜராத் பேரவைத் தோ்தல் மற்றும் தில்லி மாநகராட்சித் தோ்தலில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயத்தில் பாஜக உள்ளது. இதனால், நாள்தோறும் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிரான அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. தோ்தல்களுக்கு முன்னரே இடைத்தரகா் சந்திரசேகா் விரைவில் விடுவிடுக்கப்பட்டு, பாஜகவில் இணைந்துவிடுவாா் என கூறியுள்ளாா்.
பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷெஸாத் பூனவாலா கூறுகையில், ‘தில்லி அமைச்சா் கைலாஷ் கெலாட்டின் பண்ணை வீட்டில் சுகேஷ் சந்திரசேகரை கேஜரிவால் சந்தித்தாரா என்பதையும், அங்கு நடைபெற்ற ஆலோசனைகளையும் அறிய விரும்புகிறேன்’ என்று தெரிவித்திருந்தாா்.
தில்லி மாநகராட்சிகளுக்கான தோ்தல் அடுத்த மாதம் டிசம்பா் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பா் 7ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.