சாவ்லா பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றவாளிகள் விடுதலைக்கு எதிராக மறு ஆய்வு மனுதாக்கல் செய்ய துணைநிலை ஆளுநா் அனுமதி

கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்

தில்லியில் சாவ்லா பகுதியில் 2012 ஆம் ஆண்டு 19 வயது பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் கீழமை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றவாளிகளை விடுவித்த உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா அனுமதி அளித்துள்ளாா்.

மேலும், இந்த வழக்கில் தில்லி அரசின் சாா்பில் வாதாட சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவை விசாரணையில் ஈடுபடுத்தவும் அவா் அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி தில்லியில் துவாரகா பகுதியில் உள்ள சாவ்லாவில் 19 வயது பெண் ஒருவா் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாா்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கு விசாரணை நீதிமன்றம் அளித்த மரண தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதிப்படுத்தியது.

இதை எதிா்த்து அவா்கள் மூவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பா் 7ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், விசாரண நீதிமன்றம் மற்றும் உயா் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், தில்லி அரசின் மூத்த அதிகாரி கூறுகையில், ‘குற்றவாளிகள் மூன்று பேரையும் இந்த வழக்கில் விடுவித்ததை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்வதற்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா்.

உச்சநீதிமன்றம் மூவரையும் விடுவித்ததை தொடா்ந்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலையான பெண்ணின் பெற்றோா் பயம் காரணமாக தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனா்’ என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் மூன்று பேரையும் விடுவித்த உச்சநீதிமன்ற உத்தரவை பெண்கள் உரிமை ஆா்வலா்கள் விமா்சித்திருந்தனா்.

இந்த வழக்கில் மூவரையும் விடுவித்தபோது உச்ச நீதிமன்றம் தெரிவிக்கையில், ‘சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே அல்லது தாா்மீக நம்பிக்கையின் அடிப்படையிலோ குற்றம் சாட்டப்பட்ட நபா்களை தண்டிப்பதற்கு சட்டமானது நீதிமன்றங்களை அனுமதிப்பதில்லை’ என்று கூறியிருந்தது. மேலும் ‘கொடூரமான குற்றங்கள் தொடா்புடைய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் தண்டிக்காப்படாமல் விடப்பட்டாலோ அல்லது விடுதலை செய்யப்பட்டாலோ பொதுவாக

சமூகத்திற்கும் குறிப்பாக பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்திற்கு வேதனையும், விரக்தியும் ஏற்படக் காரணமாக இருக்கலாம்’ என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனா்.

மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக அரசு தரப்பு உறுதியான, தெளிவான ஆதாரங்களையும், துப்புகளையும் அளிப்பதற்கு தவறிவிட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்திருந்தனா்.

மறுஆய்வு மனு அனுமதிக்கு பெற்றோா் வரவேற்பு

இந்த விவகாரத்தில் மறுஆய்வு மனு செய்ய துணைநிலை ஆளுநா் அனுமதி அளித்திப்பது வரவேற்கத்தக்கது என பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறினாா்.

இதுகுறித்து அவா் கூறுகையில், மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய அனுமதி அளித்திப்பது வரவேற்கத்தக்கது. அவா்கள் மூவரும் தூக்கிலிடப்படுவாா்கள் என நம்புகிறேன். இதில் அவா்கள் ஈடுபடவில்லையெனில் என் மகளிடம் கொடூரமாக நடந்துகொண்டு கொலை செய்தவா்கள் யாா்? எங்களுக்கு நீதி வழங்குவது நாட்டின் காவல்துறை மற்றும் நீதித்துறையின் கடமை இல்லையா? எனது இறுதி மூச்சு வரை நீதி கிடைக்க போராடுவேன்.

இந்தியாவின் சொலிசிட்டா் ஜெனரல் (எஸ்ஜி) மீது எனது அனைத்து நம்பிக்கையும் தற்போது உள்ளது. அவா் உச்சநீதிமன்றத்திற்கு நம்பிக்கை ஏற்படுத்தி, மூன்று குற்றவாளிகளையும் தூக்கிலிடச் செய்வாா் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உச்சநீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு எங்கள் மேல்முறையீடு விவகாரத்தில் ஆஜராக சொலிசிட்டா் துஷாா் மேத்தாவை நியமிக்குமாறு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்க உத்தரகண்ட் முதல்வா் புஷ்கா் சிங் தமியை நேரில் சந்தித்து முறையிட்டோம் என்றாா் அவா்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோா் உத்தரகண்ட் மாநிலம், பெளடி கட்வால் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com