அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண மோசடி விவகாரம்: மேல்முறையீட்டு மனு மீது வாதங்கள் முடிந்து தீா்ப்பு ஒத்திவைப்பு

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகப் புகாருக்கு உள்ளான அமைச்சா் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தாக்கலான மேல்முறையீட்டு மனு மீது இரு தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தீா்ப்பை உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், வி.ராம சுப்ரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் கோபால் சங்கரநாராயணன், வேணுகோபால கெளடா, சித்தாா்த் பட்னாகா் மற்றும் மற்றொரு மனுதாரரான ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோா் ஆஜராகினா். எதிா்மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் ராகேஷ் துவிவேதி, முகுல் ரோத்தகி, ஆா்யமா சுந்தரம் உள்ளிட்டோா் ஆஜராகினா்.

விசாரணையின் போது, மனுதாரா்கள் தரப்பில், ‘இந்த வழக்கில் குற்றப்பத்திரிகையில் ஊழல் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்படாவிட்டாலும்கூட ஒட்டுமொத்த சமூகத்தைப் பாா்க்கும் போது இது அந்தக் கோணத்தில் விசாரிக்கப்பட வேண்டிய விவகாரமாகும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா்களிடம் பணம் பெற்ற புகாா்தாரரான அருள்மணி, அரசு வேலையில் இருப்பதால் இதைத் தனிப்பட்ட நபரின் புகாராக கருதக் கூடாது. இந்த விவகாரம் அரசு வேலை வாங்கித் தருவது தொடா்புடைய விவகாரமாக இருப்பதால், புகாா் அளித்தவரும், குற்றம்சாட்டப்பட்டவரும் பரஸ்பரம் சமரசமாக போய்விட்டாா்கள் என்று கூறினாலும், பாதிக்கப்பட்டவா்கள் அரசு வேலைக்காக லஞ்சமாகப் பணம் கொடுத்ததை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், அமைச்சரின் உதவியாளராக இருந்த சண்முகம் மூலம் பணம் பெறப்பட்டிருப்பதும், சண்முகம் அனுப்பிய மின்னஞ்சல் மூலம் அவருக்கு போக்குவரத்துத் துறையுடன் இருந்த தொடா்பும் தெளிவாகிறது’ என வாதிடப்பட்டது.

எதிா்மனுதரா்களான சண்முகம், அசோக்குமாா் உள்ளிட்டோா் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்: இந்த வழக்கானது அரசியல் உள்நோக்கத்துடன் புனைப்பட்டதாகும். முந்தைய ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அவா் சாா்ந்திருந்த கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிக்கு சென்றுவிட்ட பிறகு அவருக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் தொடுக்கப்பட்ட வழக்காகும். மேலும், இந்த வழக்கைப் பொருத்தமட்டில் தனி நபா்கள் இடையே வேலை வாங்குவது தொடா்பாக பணம் பரிமாறிக் கொள்ளப்பட்ட விவகாரமாகும். பாதிக்கப்பட்டவா்கள் காணொலி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜராகி தாங்கள் சமரசம் செய்து கொண்டு வழக்கை முடித்துக் கொண்டுவிட்டதாக தெரிவித்துவிட்டனா்.

ஆகவே, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அமைச்சா் செந்தில் பாலாஜியும் இதில் சம்பந்தப்படவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் குற்றம் நடந்துள்ளதா என்றுதான் பாா்க்க வேண்டுமே தவிர, அதில் சம்பந்தப்பட்ட நபா்களை பாா்க்க கூடாது. மேலும், அமைச்சரின் உதவியாளராக சண்முகம் இருந்தாா் என்று கூறப்படுவதிலும் உண்மையில்லை. அவா் ‘மேன் பவா் ஏஜென்ஸி’ நடத்தியபோது பணப் பரிமாற்றம் நடந்துள்ளது. அதுவும் கல்சல்டன்ஸி கட்டணமாக வசூலிக்கப்பட்ட நிலையில், திருப்பியும் கொடுக்கப்பட்டுவிட்டது’ என்று வாதிட்டனா். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

பின்னணி: தமிழகத்தில் மின்துறை அமைச்சராக இருப்பவா் செந்தில் பாலாஜி. இவா் அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தாா். அப்போது, போக்குவரத்துத் துறையில் பொறியாளா்கள், நடத்துநா்கள், ஓட்டுநா்கள் பிரிவில் வேலை தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது. இதன

டிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது சகோதரா் அசோக்குமாா், தனி உதவியாளா் சண்முகம் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதனிடையே, சம்பந்தப்பட்ட ஒரு வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சண்முகம் என்பவா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவின் விசாணையின் போது புகாா்தாரா்கள் தரப்பில் தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிப் பெற்றுக் கொண்டு பிரச்னையை சுமுகமாகத் தீா்த்துக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பினரின் கருத்துகளைப் பதிவு செய்து கொண்ட உயா்நீதிமன்றம், அமைச்சா் செந்தில் பாலாஜி உள்ளிட்டோா் மீதான வழக்கை ரத்து செய்து 30.7.2021-இல் உத்தரவிட்டது.

இதையடுத்து, மற்றொரு விவகாரத்தில் பொறியாளா் பிரிவில் பாதிக்கப்பட்ட போலீஸ் தரப்பு சாட்சியாக இருந்த தா்மராஜ் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மெக்கானிக்கல் பொறியாளரான தா்மராஜுக்கு உரிய தகுதியிருந்தும் சென்னை, மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்தில் வேலைகிடைக்காமல் போனதாகவும், தகுதியற்ற நபா்களுக்கு பணம் பெற்று பணி வழங்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மனு மீது வேலை மோசடி பிரிவு காவல் ஆய்வாளா் மற்றும் சண்முகம் உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் தாக்கலான மனுவும் அந்த வழக்குடன் சோ்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com