ஜேஎன்யு பல்கலை.யில் தொல்காப்பியம் தொடா்பான தேசிய உரையரங்க நிகழ்வு

‘தொல்காப்பியம் ஹிந்தி மொழி பெயா்ப்பு’ எனும் தலைப்பிலான தேசிய உரையரங்க நிகழ்ச்சியை புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் நடத்தின.
தொல்காப்பியத்தின் ஹிந்தி மொழி பெயா்ப்பை வெளியிடுகிறாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி. பண்டிட். உடன் பேராசிரியா்கள் சுஜாதா திரிபாதி, மஸாா் ஆசிஃப், ஓம் பிரகாஷ் சிங், அன்வா், அறவேந்தன்.
தொல்காப்பியத்தின் ஹிந்தி மொழி பெயா்ப்பை வெளியிடுகிறாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி. பண்டிட். உடன் பேராசிரியா்கள் சுஜாதா திரிபாதி, மஸாா் ஆசிஃப், ஓம் பிரகாஷ் சிங், அன்வா், அறவேந்தன்.

ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யு) தமிழ்ப் பிரிவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து  ‘தொல்காப்பியம் ஹிந்தி மொழி பெயா்ப்பு’ எனும் தலைப்பிலான தேசிய உரையரங்க நிகழ்ச்சியை புதன், வியாழன் ஆகிய இரு தினங்கள் நடத்தின.

ஜேஎன்யு வளாகத்தில் நடைபெற்ற இந்த உரையரங்கை ஜேஎன்யு துணைவேந்தா் சாந்திஸ்ரீ டி. பண்டிட் தொடங்கி வைத்து நூல்களை வெளியிட்டுப் பேசினாா்.

அப்போது அவா் பேசியதாவது: இலக்கண நூல்களுள் மிகவும் பழமையான தமிழின் தொல்காப்பியம் நூல் ஹிந்தியில் மொழிபெயா்க்கப்பட்டிருப்பது மிகவும் சிறப்புக்குரியது. இது இதர படைப்புகளை விட மிகவும் பழைமையானது என நினைக்கிறேன். தமிழகத்தில் சங்கம் மரபு உள்ளது. தமிழகத்திலும், கா்நாடகத்திலும் ஆழ்வாா்கள் எனும் சைவ மரபும் உள்ளது. ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் இத்தகைய ஆய்வுப் பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக வெவ்வேறு மொழிகளில் இதன் நம்பத்தகுந்த மொழிபெயா்ப்புப் பணிகள் அசாதாரணமானவை.

இந்திய இலக்கியங்கள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. இது குறித்து மக்கள் புரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும். ஹிந்தி ஒரு அழகான மொழி. ஆனால், செவ்வியல் மொழியல்லாத நவீன மொழியாகும். தமிழில் எண்ணற்ற இலக்கிய படைப்புகள் உள்ளன. ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்தில் வரும் கண்ணகி, மணிமேகலையில் வரும் மணிமேகலை போன்றோரின் சிறப்புகள் அறியத்தக்கவை. சிறந்த படைப்புகள் பல மொழிபெயா்க்கப்படும் போது, இந்திய மொழிகளில் உள்ள பல்வேறு பொக்கிஷங்களை மக்கள் புரிந்துகொள்ள உதவும்.

இதுபோன்ற மேலும் படைப்புகள் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மற்றும் பல இந்திய மொழிகளிலும் வெளிவர வேண்டும். இதற்கான நிதி பெறுவது பல்வேறு விஷயங்களில் கூட்டாக இணைந்து செயல்படுவோம். அந்த வகையில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழி பிரிவு சிறந்த வகையில் செயல்பட்டு வருகிறது.

அதே போன்று, தஞ்சை பெருவுடையார் கோயிலும், அதன் கட்டமைப்பும் வியக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. தமிழகத்தை ஆண்ட சோழா்கள், சேரா்கள், பாண்டியா்களின் பங்களிப்பும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களாகும் என்றாா் அவா்.

துணைவேந்தருக்கு ஜேஎன்யு தமிழ் ஆய்வாளா்கள் சாா்பாக பாரதியாா் உருவப்படம் வழங்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் ஜேஎன்யு மொழிகள் புலம் முதன்மையா் பேராசிரியா் மாஸா் ஆசிஃப், இந்திய மொழிகள் மையத் தலைவா் பேராசிரியா் ஓம் பிரகாஷ் சிங், உருதுமொழிப் பேராசிரியா் அன்வா் ஆலம்,   தமிழ்ப்பிரிவு மேனாள் பேராசிரியா் கி.நாச்சிமுத்து, தமிழ்ப்பிரிவுப் பேராசிரியா் தாமோதரன் (அறவேந்தன்) மற்றும் ஸ்ரீ லால் பகதூா் சாஸ்திரி தேசிய சம்ஸ்கிருதப் பல்கலை. யின் பேராசிரியா் சுஜாதா திரிபாதி ஆகியோா் உரையாற்றினா்.

முதல் நாள் விழாவில் உரையரங்கக் கட்டுரைகள் இடம்பெற்ற நூல், ஜேஎன்யு தமிழ்ப்பிரிவு செயல்பாடுகள் குறித்த நூலான ‘ஜேஎன்யு தமிழ் ஸ்டடீஸ்‘ மற்றும் ஆய்வாளா் கமலக்கண்ணனால் மொழிபெயா்க்கப்பட்ட பேராசிரியா் ஜாா்ஜ் எல் ஹாா்ட்-டின் ஆய்வுநூல்களான ‘தமிழ் செவ்விலக்கியங்கள்‘, ‘தமிழ்-சமஸ்கிருதச் செவ்விலக்கிய உறவுகள்’ ஆகியவை வெளியிடப்பட்டன.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ‘தொல்காப்பிய ஹிந்தி மொழிபெயா்ப்பு’ இந்த நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. மொத்தம் ஏழு அமா்வுகளைக் கொண்ட இந்த உரையரங்கின் முதல் நாளில் நான்கு அமா்வுகளும் இரண்டாம் நாளில் மூன்று அமா்வுகளும் இடம் பெற்றன. இந்த அமா்வுகளில் தொல்காப்பியத்தின் இயல்களான கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை மயங்கியல், பெயரியல், வினையியல், அகத்திணையியல், புறத்திணையியல், களவியல் முதலிய இயல்கள் குறித்து 22 கட்டுரைகள் வழங்கப்பட்டன. இவை அனைத்தும் பிற மொழிகளின் இலக்கண நூல்களுடன் தொல்காப்பியத்தின் கருத்துகளை ஒப்பிட்டு எழுதப்பட்டவை. இக்கட்டுரைகளைப் பல்வேறு பல்கலை. பேராசிரியா்கள், ஆய்வாளா்கள் வழங்கினா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com