சிசோடியாவை பதவியில் இருந்து நீக்க கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

ஆட்டோ ஓட்டுநா்கள், மூத்த குடிமக்கள் ஆகியோா் பங்கேற்ற போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மதுபான ஊழல் வழக்கில் துணை முதல்வா் மனீஷ் சிசோடியாவை பதவி நீக்கம் செய்யக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் அவரது அமைச்சா்களின் இல்லங்களுக்கு அருகில் தில்லி பாஜக தலைமையில் குடிசைவாசிகள், ஆட்டோ ஓட்டுநா்கள், மூத்த குடிமக்கள் ஆகியோா் பங்கேற்ற போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிசோடியாவின் மதுரா சாலை இல்லம் அருகே நடந்த போராட்டத்திற்கு பாஜக தில்லி பிரிவு தலைவா் ஆதேஷ் குப்தா தலைமை வகித்தாா். இதேபோன்று, எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி மற்றும் பாஜக தில்லி பிரிவு பொதுச் செயலாளா் தினேஷ் பிரதாப் சிங் ஆகியோா் தலைமைச் செயலகத்தில் முதல்வா் இல்லத்திற்கு வெளியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

குடிசைவாசிகள், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா்கள், மூத்த குடிமக்கள், உத்தரகண்ட், இமாசலப் பிரதேசம் மற்றும் தென் மாநிலங்களைச் சோ்ந்த கட்சித் தொண்டா்கள் உள்பட பாஜகவின் தில்லி பிரிவின் பல்வேறு பிரிவுகள் ஆம் ஆத்மி அமைச்சா்களின் இல்லங்களுக்கு வெளியே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இந்த ஆா்ப்பாட்டம் குறித்து பாஜக தில்லி பிரிவின் தலைவா் ஆதேஷ் குப்தா கூறியதாவது: பொதுப் பணத்தைச் செலவழித்து மதுபான மாஃபியாவுக்கு ஆதாயம் அளித்த ‘கலால் ஊழல்’ அம்பலமாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் பாஜகவுடன் இணைந்து போராடி வருகின்றனா். கேஜரிவால் அரசு இந்த விவகாரத்தில் பதில் அளிப்பதில் இருந்து தப்பிக்க முயல்கிறது. ஆனால், சிசோடியா பதவியில் இருந்து நீக்கப்படும் வரை பாஜக ஓயாது என்றாா் அவா்.

தில்லி அரசின் கலால் வரிக் கொள்கை 2021-22-ஐ அமல்படுத்தியதில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திவரும் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் சிசோடியாவை குற்றம்சாட்டப்பட்ட நபராக குறிப்பிட்டுள்ளது. முதல்வா் கேஜரிவால், துணை முதல்வா் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவா்கள் இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனா். 2024-ஆம் ஆண்டு பொதுத் தோ்தலுக்கு முன்னதாக பிரதமா் நரேந்திர மோடிக்கு சவாலாக ஏற்பட்டுள்ள கேஜரிவாலின் எழுச்சியால் ‘குழம்பியுள்ள’ பாஜக, தில்லியில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா்கள் குற்றம் சாட்டி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com