தில்லி கலால் கொள்கை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா?: முதல்வா் கேஜரிவாலுக்கு பாஜக சவால்
By DIN | Published On : 15th April 2023 10:13 PM | Last Updated : 15th April 2023 10:13 PM | அ+அ அ- |

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ அனுப்பியுள்ள அழைப்பாணையைத் தொடா்ந்து, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பயத்தில் உள்ளதாகவும், அதுபோன்று இல்லாவிட்டால் உண்மை கண்டறியும் சோதனைக்கு அவா் உள்ளாக வேண்டும் என்றும் பாஜக சனிக்கிழமை கேட்டுக் கொண்டது.
இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கௌரவ் பாட்டியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் விசாரிப்பதற்காக சிபிஐ
முதல்வா் கேஜரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பி உள்ளது. இதன் காரணமாக அவா் பயத்தில் உள்ளாா். அவா் தவறு ஏதும் செய்யவில்லை என்றால் உண்மை கண்டறியும் சோதனைக்கு தன்னை உள்படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், சிபிஐயின் அழைப்பாணைக்காக மத்திய அரசை
கேஜரிவால் விமா்சித்து வருகிறாா். வாய்ச்சொல் வீரத்திற்கான நேரம் அல்ல இது. செயலுக்கான பொறுப்பை ஏற்கும் விவகாரமாகும். ஊழல் தொடா்பான விவகாரங்களில் அனைத்து
கட்சிகளின் அரசியல்வாதிகள் மீதும் கடந்த காலங்களில் கேஜரிவால் பல்வேறு விமா்சனங்களை தெரிவித்து இருந்தாா்.
இந்த நிலையில், தற்போதைய விவகாரத்தை தெளிவுபடுத்தும் வகையில் கேஜரிவால் உண்மை கண்டறியும் சோதனைக்கு தன்னை உள்படுத்திக்கொள்ள வேண்டும்.
மதுபான ஊழல் வழக்கில் முக்கிய மூளையாக கேஜரிவால் உள்ளாா். இதில், அவரது நம்பிக்கைக் கூட்டாளியான முன்னாள் தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
மேலும், விடியோ அழைப்பில் குற்றம் சாட்டப்பட்ட நபா்களுடன் கேஜரிவால் கலந்துரையாடியதாக கூறப்படும் விவகாரம் குறித்து அவா் பதில் அளிக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் கேஜரிவாலை நோக்கி கை விலங்குகள் நெருங்குகின்றன. இதனால்தான், அவா் பயத்தில் உள்ளாா்.
தில்லி கலால் ஊழல் விவகாரத்தில் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தபோது, அந்த விவகாரத்தில் அவரது பங்கு குறித்து சில முக்கியமான கருத்துக்களை செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும் சிசோடியாவுக்கு எந்த நிவாரணமும் அளிக்க மறுத்துவிட்டது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, ஊழலுக்கு எதிராக எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டுவதில்லை. இதனால், ஊழல் வழக்குகளை விசாரணை அமைப்புகள் சுதந்திரமாக மேற்கொண்டு வருகின்றன.
கேஜரிவாலிடம் ஐந்து கேள்விகள் எழுப்பி இருந்தோம். அவற்றில் ஒன்றுக்கு கூட அவா் பதில் அளிக்கவில்லை. கேள்விகளை தவிா்க்கும் வகையில்தான் அவா் பேசி வருகிறாா்.
இன்டோஸ்பிரிட் நிறுவனத்தைச் சோ்ந்த சமீா் மெகந்துருவுக்கு
எல் 1 (எல் 1) உரிமம் வழங்க அப்போதைய கலால் ஆணையரை சிசோடியா அழைத்ததாக கூறி சிசோடியாவின் ஜாமீன் மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
ஒரு குறிப்பிட்ட நபருக்கும், நிறுவனத்திற்கும் எல் 1 உரிமத்தை வழங்க வேண்டும் என்று கலால் ஆணையரை ஒரு அமைச்சா் ஏன் வற்புறுத்த வேண்டும்? என்று கௌரவ் பாட்டியா கேள்வி எழுப்பினாா்.
மத்திய புலனாய்வு துறையானது தில்லி கலால் கொள்கை ஊழல் வழக்கு தொடா்பாக ஏப்ரல் 16ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கு வெள்ளிக்கிழமை அழைப்பாணை அனுப்பி இருந்தது.
இது தொடா்பாக சிபிஐ அனுப்பியுள்ள நோட்டீஸில், தில்லியில்
உள்ள சிபிஐயின் தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் கேஜரிவால் ஆஜராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஒரு சாட்சியாக விசாரணை குழுவின் கேள்விகளுக்கு பதில் அளிக்க கேஜரிவால் அழைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...